கல்வி வளர்ச்சி நாளில் பணி நிரந்தரம் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
சென்னை: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை (ஜூலை 15) தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறது. அந்த நாளில், பகுதிநேர ஆசிரியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பாடங்களை நடத்தி வருகின்ற 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காத்திட பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த காலத்தில் 12,500 ரூபாய் சம்பளத்தை வைத்து குடும்பங்களை நடத்த போதாது. அதிலும் மே மாதம் சம்பளம் இல்லாமல் 13 ஆண்டாக தவித்து வருகின்றனர். மற்ற தற்காலிக தினக்கூலி பணியாளர்களுக்கு கிடைகின்ற போனஸ் கூட, இந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு இல்லை என்பது வேதனையிலும் வேதனை. பணி காலத்தில் மரணம் அடைந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு அரசு இதுவரை நிதி வழங்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. அதுபோல் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ம் தேதி பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்த 10 லட்சம் மருத்துவ காப்பீடுக்கு இதுவரை அரசாணை வெளியிட வில்லை. 13 ஆண்டுகளாக பணிபுரியும் போதும், அரசின் பண பலன்களை பகுதிநேர ஆசிரியர்களால் பெற முடியவில்லை. மாணவர்கள் முன்னேற்ற நிதி வழங்கும் அரசு, அந்த கல்வியை போதிக்கும் பகுதிநேர ஆசிரியர்களையும் முன்னேற்ற வேண்டும்.
தமிழக முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் குறிப்பிட்டவாறு, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கை முதல்வரிடம் நேரில் பலமுறை கொடுத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. கல்வி வளர்ச்சி நாளில், முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் விடியலை தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.