ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்திற்கு 2000 கோடி ரூபாயை உடனே வழங்கிட ஒன்றிய அரசிற்கு வேண்டுகோள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 24, 2024

Comments:0

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்திற்கு 2000 கோடி ரூபாயை உடனே வழங்கிட ஒன்றிய அரசிற்கு வேண்டுகோள்



*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்திற்கு தமிழக அரசிற்கு வழங்க வேண்டிய 2000 கோடி ரூபாயை உடனே வழங்கிட ஒன்றிய அரசிற்கு ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் வேண்டுகோள்*

கல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் பண்பாடு,கலாச்சாரம்,மொழி போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.தலைநகர் டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டின் மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்ற பாடத்திட்டத்தை உருவாக்குவது என்பது முட்டாளத்தனமானது.இதுபோன்ற செயல்கள் அந்தந்த மாநிலத்தின் தனித்தன்மையை,அதன் பெருமைகளை சீர்குலைக்கும் செயலாகும்.

தேசியக் கல்வி கொள்கையில் உள்ள முன்னேறும் இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் (பி.எம்.ஸ்ரீ பள்ளி) திட்டத்தை தமிழ்நாடு செயல்படுத்தவில்லை என்ற காரணத்தை கூறி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 2000 கோடி ரூபாயை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்பது தேசிய கல்விக் கொள்கை 2020-ல் கூறியபடி, அதிக அளவிலான செய்முறை பயிற்சிகள் மற்றும் முழுமையான கல்வி முறையை பின்பற்றும். பொம்மைகள் மூலம் விளையாட்டு அடிப்படையிலான கல்வி, கேள்வி கேட்கும் முறை, கண்டுபிடிப்பு சார்ந்த முறை, ஜாலியாக கற்கும் முறைகள் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும்.

இத்திட்டத்தில் சேர பள்ளிகள் ஆன்லைன் மூலம் தானாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி, முதல் 2 ஆண்டு காலத்துக்கு, ஆண்டுக்கு 4 முறை ஏற்படுத்தப்படும். இதற்கான தேர்வு முறை 3 கட்டங்களாக குறிப்பிட்ட காலவரம்புடன் மேற்கொள்ளப்படும்.

முதல் கட்டமாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். இரண்டாம் கட்டத்தில், பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல் அடிப்படையில், பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு தகுதியான பள்ளிகள் தேர்வு செய்யப்படும். நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பள்ளிகளுக்கு, நேரடி ஆய்வுகள் மூலம் சான்று அளிக்கப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒரு வார்டுக்கு அதிகபட்சம் 2 பள்ளிகள் தேர்வு செய்யப்படும். இந்தப் பள்ளிகள், பசுமை பள்ளிகளாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், ஊட்டச்சத்து தோட்டங்கள், கழிவு மேலாண்மை வசதிகள் உள்ளதாகவும், மழை நீர் சேமிப்பு வசதியுடனும் மேம்படுத்தப்படும். கல்வி என்பது ஏழை,பணக்காரன் போன்ற பாகுபாடுகள் எல்லாம் இல்லாமல் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.ஒரு பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு தரமான கல்வியும்,இன்னொரு பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு அதைவிட தரம் குறைவான கல்வியும் அரசே வழங்குவது என்பது ஏற்புடையது இல்லை. பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அதி நவீன வசதியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் என்றால் மற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இதுபோன்ற தரமான கல்வி தேவையில்லையா?

இந்தியா முழுமையும் இலட்சக்கணக்கான பள்ளிகள் இருக்கும் போது அதில் 14,500 பள்ளிகள் மட்டும் சிறப்பு தகுதி வாய்ந்தவை என்றால் இது மக்களாட்சியின் மகத்துவத்தையே கேள்விக்குள்ளாக்குவது ஆகும்.

மேலும் இந்த திட்டத்தையே தமிழ்நாடு அரசு முற்றிலுமாக புறக்கணிக்கவும் இல்லை.தமிழ்நாடு கல்வியாளர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பை கருத்தில் கொண்டு இத்திட்டத்தின் சாதக,பாதகங்களை அலசி ஆராய தமிழ்நாடு அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழு கொடுக்கும் அறிக்கையின் படி அரசு முடிவெடுக்கும்.

ஒரு மாநில அரசானது தனது மாநில மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து,மாநில மக்களின் நலன் கருதி தான் முடிவெடுக்க முடியும். இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை என்ற காரணத்தை கூறி தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதியில் இருந்து 2000 கோடி ரூபாயை நிறுத்தி வைத்துள்ளது.இதனால் மாணவர்களின் கல்விக்கு தேவையான செலவினங்களை செய்வதில் பின்னடைவு ஏற்பட்டு அவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மாணவர்களின் கல்வி மட்டுமில்லாமல் பள்ளிகளின் மேம்பாடு,ஆசிரியர்களின் ஊதியம் போன்ற கல்வி சார்ந்த அனைத்து பணிகளிலும் தொய்வு ஏற்படும்.

நான் சொல்வதை நீ கேட்கவில்லை என்றால் உனக்கு ஒதுக்கிய நிதியை நான் கொடுக்க மாட்டேன் என்பது மிரட்டல் போக்கு ஆகும்.இத்தகைய போக்கானது ஒன்றிய மற்றும் மாநில அரசுக்களுக்கு இடையே நல்லுறவை வளர்க்காது.இதனால் பாதிக்கப்படுவது எதிர்கால சமுதாயத்தின் தூண்களான மாணவர்களே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும்,திமுக கூட்டணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் மாண்புமிகு தரமேந்திரா பிரதான் அவர்களை சந்தித்து நிறுத்தி வைக்கப்பட்ட 2000 கோடி ரூபாயை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மாணவர்களின் நலன் கருதி,மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று ஒன்றிய அரசு இந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

பழ.கௌதமன்

மாநிலத் தலைவர்

ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews