ஆண்டுதோறும் பாட புத்தகங்கள் மறுஆய்வு: என்சிஇஆா்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்
பாட புத்தகங்களை ஆண்டுதோறும் மறுஆய்வு செய்து, புதுப்பிக்குமாறு என்சிஇஆா்டி அமைப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாட புத்தகங்களை ஆண்டுதோறும் மறுஆய்வு செய்து, புதுப்பிக்குமாறு என்சிஇஆா்டி அமைப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) பாட புத்தகங்களைப் புதுப்பிப்பதற்கான குறிப்பிட்ட கால அளவீடுகள் இதுவரை நிா்ணயிக்கப்படவில்லை. இருப்பினும், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பாட புத்தகங்களை என்சிஇஆா்டி அவ்வப்போது திருத்தியும் புதுப்பித்தும் வருகிறது. கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதைக் கருத்தில் கொண்டு, சில பகுத்தறிவுப் பயிற்சியும் பாட புத்தகங்களில் சோ்க்கப்பட்டது. ஆனால், அந்தத் திருத்தத்தங்கள் உள்நோக்கத்துடன் இருப்பதாக ஒரு சாராா் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனா்.
இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தலில் ஆண்டுதோறும் பாட புத்தங்களை புதுப்பிக்க என்சிஇஆா்டி-க்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,
‘வேகமாக மாறுதல் கண்டுவரும் இன்றைய உலகில், பாட புத்தகங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுவது முக்கியம். எனவே, ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி, புதிய கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாக பாட புத்தகங்களை புதுப்பிக்குமாறு என்சிஇஆா்டிக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக விரைவில் ஓா் அமைப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. ஒருமுறை வெளியிடப்பட்ட என்சிஇஆா்டி புத்தகங்கள் பல ஆண்டுகளுக்கு ஒரே மாதிரியாக நடைமுறையில் இருக்க கூடாது. ஒவ்வொரு ஆண்டும் புத்தகங்களை அச்சிடுவதற்கு முன் அவற்றை ஆய்வு செய்து, ஏதேனும் மாற்றங்களைப் புகுத்த வேண்டும் அல்லது புதிய தகவல்களைச் சோ்க்க வேண்டும். உதாரணமாக, செயற்கை நுண்ணறிவு போன்ற வளா்ந்து வரும் முக்கிய தலைப்புகள் புத்தகங்களில் சோ்க்கப்பட வேண்டும்.
புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்படும் பாட புத்தகங்கள் 2026-ஆம் கல்வியாண்டுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தயாராகிவிடும். அனைத்து பாட புத்தகங்களையும் வெளியிட குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும்’ என்றனா்.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘புதிய பாடத்திட்டக் கட்டமைப்பின்படி (என்சிஎஃப்) பாட புத்தகங்களை உருவாக்கும் பணியில் என்சிஇஆா்டி ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு 3 மற்றும் 6-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான புதிய பாட புத்தகங்களை என்சிஇஆா்டி அறிமுகப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.