TNPSC - தமிழ் மொழித்தாள் தேர்வில் 40% பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு: அரசாணையை உறுதி செய்தது ஐகோர்ட் TNPSC - Only 40% score in Tamil language paper to mark answer sheet: Court upholds order
அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைச் சட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அரசுப் பணிக்கு நடத்தப்படும் தேர்வில், தமிழ் மொழித்தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொதுஅறிவு மற்றும் திறனறிவு தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.
இந்த அறிவிப்பாணையை எதிர்த்தும், தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு, திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை எதிர்த்தும் நிதேஷ் என்பவர் உள்பட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் , ‘தமிழ் மொழித்தாள், பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுகள் என இரு பகுதிகளாக, தலா 150 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆங்கில வழியில் படித்த விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுவர். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏற்கெனவே 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பின் மூலம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 100 சதவீத அரசு வேலைவாய்ப்பு என்பது போலாகிவிடும்,’என வாதிடப்பட்டது.
அப்போது தமிழக அரசுத்தரப்பில், ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், ஏற்கெனவே சில தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டது. தமிழகத்தில் தமிழ் மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்பதால் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்,’என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , ‘விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. குரூப் 4 பதவிகளை வகிக்கும் அரசு ஊழியர்கள், பொது மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம் என்ற அரசு தலைமை வழக்கறிஞரின் வாதம் சரியானது தான். தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே மற்ற பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்று தான் அரசு நிபந்தனை விதித்துள்ளது. மாறாக தமிழ் மொழித்தாளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசு வற்புறுத்தவில்லை. எனவே அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்,’ என உத்தரவிட்டார்
Search This Blog
Friday, May 31, 2024
Comments:0
Home
Chennai High Court
Court Judgement
TNPSC
TNPSC - தமிழ் மொழித்தாள் தேர்வில் 40% பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு: அரசாணையை உறுதி செய்தது ஐகோர்ட்
TNPSC - தமிழ் மொழித்தாள் தேர்வில் 40% பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு: அரசாணையை உறுதி செய்தது ஐகோர்ட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.