நீட் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? - உச்சநீதிமன்றம் அதிரடி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 18, 2024

Comments:0

நீட் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? - உச்சநீதிமன்றம் அதிரடி தகவல்



“நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை”

நீட் தேர்வு முடிவுகளை திட்டமிட்டபடி வெளியிட எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு

2024 நீட் நுழைவுத்தேர்வு மே 5-ல் நடைபெற்ற நிலையில் ஜூன் 14ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன

மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வினாத்தாள் கசிந்ததாக தொடரப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணையை ஜூலைக்கு எடுத்துக்கொள்வதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் எனும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களின் பாடத்திட்டங்களின் கீழ் படித்த, படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பை எதிர்கொள்வதற்கு பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. மருத்துவ படிப்பு எனும் கனவையே தொலைக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

இதனால் நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாடு மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறது. கடும் எதிர்ப்புகளுக்கும் இடையே நீட் நுழைவுத்தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் மாணவர்கள் முறைகேடுகள் ஈடுபடுவதை தடுக்க கடுமையான கெடுபிடிகள் காட்டப்படுகின்றன. எனினும், வடமாநிலங்களில் நீட் தேர்வின் போது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் எழுகின்றன. மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் பிடிபட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், தேர்வில் முறைகேடு செய்ததாக பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

அதேபோல் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தாகவும் தகவல் கசிந்தது. ஆனால் இதனை தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், முறைகேடு புகார்கள் எழுந்துள்ளதால் நீட் தேர்வை புதிதாக நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது அதே வேளையில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை எதுவும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்த தலைமை நீதிபதி, கோடை விடுமுறைக்கு பிறகு அதாவது ஜூலை மாதத்தில் மனு மீதான விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.

2024 -2025 ஆம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 557 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக இந்த ஆண்டு 23 லட்சம் மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். நீட் தெர்வு முடிவுகள் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews