The teachers who took the government school girls who won the aptitude test! திறன் தேர்வில் வென்ற அரசு பள்ளி மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்ற ஆசிரியைகள்!
வருவாய் வழி, ஊக்கத்தொகைக்கான தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்ற ஆசிரியைகளை பொதுமக்களும், சக ஆசிரியர்களும் பாராட்டினர். உடுமலை அடுத்த கிளுவன்காட்டூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 187 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி தலைமையாசிரியராக அங்கீஸ்வரி உட்பட 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசின் வருவாய் வழி திறன் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேர்வில் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் லாவண்யா மற்றும் தீபிகா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் பயனாக இருவரும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி பயில மாதம் ரூ.1000 உதவித்தொகை கிடைக்க பெறுவர்.
முன்னதாக இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவிகளை விமானத்தில் சென்னை வரை அழைத்துச் செல்வதாக ஆசிரியைகள் ஸ்ரீ தேவி, இந்து மதி ஆகியோர் உறுதியளித்திருந்தனர். அதன்படி இரு மாணவிகளையும், பெற்றோர் மற்றும் கல்வி அதிகாரிகள் அனுமதியின்பேரில் கடந்த 9-ம் தேதி கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றனர். பின், சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தனர். இரவு ரயில் மூலம் கிளம்பி நேற்று உடுமலைக்கு வந்து சேர்ந்தனர்.இந்த பயண அனுபவம் தங்களுக்கு நெகிழ்ச்சி அளிப்பதாகவும், மேலும் தொடர்ந்து நன்றாக படிக்க வேண்டும் என்ற உந்துதலை அளிப்பதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் கூறும்போது,
‘‘போட்டித் தேர்வுகளுக்கு இணையாக நடைபெறும் இத்தேர்வில் எங்கள் பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் அனைவரும் ஊக்குவித்தனர். இதில் வெற்றிபெற்ற 2 மாணவிகளை, ரூ.22,000 செலவு செய்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றனர். இது மற்றமாணவர்களையும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இரு ஆசிரியைகளையும், பெற்றோரும், சக ஆசிரியர்களும் பாராட்டினர்’’ என்றார்.கோவையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு பயணம் செய்த கிளுவன்காட்டூர் அரசுப் பள்ளி மாணவிகளுடன், ஆசிரியைகள்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.