குரூப்-2 மெயின் தேர்வில் ஆங்கில வழியில் தேர்வெழுதியோர் அதிகம் தேர்ச்சி: டிஎன்பிஎஸ்சி மீது தேர்வர்கள் குற்றச்சாட்டு
குரூப்-2 மெயின் தேர்வை ஆங்கில வழியில் எழுதியோர் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதேநேரத்தில் தமிழ் வழியில் தேர்வெழுதியோர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் தேர்வர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகிய இரு முக்கிய நிலைகளை உள்ளடக்கியது. முதல்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வெழுத அனுமதிக்கப்படுகிறார்கள். முதன்மைத் தேர்வு விரிவாக விடையெழுதும் வகையில் அமைந்திருக்கும். இதில் தேர்வர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் தமிழ் வழியிலோ அல்லது ஆங்கில வழியிலோ தேர்வெழுதலாம்.
இந்நிலையில், குரூப்-2 முதன்மைத் தேர்வில் ஆங்கில வழியில் தேர்வு எழுதுவோர்தான் அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்று வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கூறியதாவது: அண்மையில் வெளியான குரூப்-2, குரூப்-2 முதன்மை தேர்வில் ஆங்கில வழியில் தேர்வெழுதிய மாணவர்களே அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் வழியில் தேர்வை எழுதியவர்கள் மிக குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளனர். அப்படியானால் தமிழ்நாட்டில் தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களை டிஎன்பிஎஸ்சி ஏளனமாக பார்க்கிறதா?
தமிழ் வழியில் தேர்வெழுது வோர் பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள்தான். தமிழ் வழியில் தேர்வெழுதும் காரணத்தால் அவர்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த பாதிப்பு இந்த தேர்வில் மட்டுமல்ல இதற்கு முந்தைய ஆண்டு தேர்வுகளின் போதும் இதேநிலைதான்.
கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் தமிழ் வழியே எழுதியோர் மற்றும் ஆங்கில வழியில் எழுதியோர் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.