பயண விரும்பிகளுக்கேற்ற வைல்ட்லைப் படிப்புகள்!
வன வாழ்வியல் என்கிற வைல்டுலைப் (Wildlife) என்றால் நமக்கு போட்டோகிராபி மட்டும்தான் தெரியும். அது சார்ந்து நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய படிப்புகளுக்கு உலகம் முழுவதும் பிரமாண்டமான வாய்ப்புகளும் இருக்கின்றன. யுனெஸ்கோ போன்ற அமைப்புகளும்கூட அந்தப் படிப்புகளை முடித்த பட்டதாரிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் இதுபற்றிப் பெரிய அளவில் விழிப்புணர்வில்லை. வன வாழ்வியல் என்பது விலங்குகள், தாவரங்கள், வனங்களில் வாழும் பழங்குடி மக்கள் என அனைவரையும் உள்ளடக்கியது. இவை அனைத்தையும் அதனதன் இயல்புகளோடு பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கென நிறைய திட்டங்கள் தேவைப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகள், ஐ.நா போன்ற உலகளாவிய அமைப்புகள் பலவும் ஏராளமான நிதியை ஒதுக்குகின்றன. அந்தத் திட்டங்களையெல்லாம் செயல்படுத்த இந்தத்துறை சார்ந்த அனுபவமுள்ள பட்டதாரிகள் ஏராளம் பேர் தேவைப்படுகிறார்கள். வேளாண்மை, சமூக அறிவியல், விலங்கியல், தாவரவியல் படித்தவர்கள்கூட வைல்டுலைப் தொடர்பான உயர் படிப்புகளைப் பற்றி யோசிப்பதில்லை.
இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு தான் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் Wildlife Institute of India என்ற நிறுவனத்தை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உருவாக்கியது மத்திய அரசு. வைல்டுலைப் தொடர்பான ஆராய்ச்சிகள், மேலாண்மை, பாதுகாப்பு சார்ந்து நிறைய முதுநிலைப் பட்டப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் இங்கே வழங்கப்படுகின்றன. 1982 முதல் செயல்படும் இந்த நிறுவனத்துக்கு தமிழகத்தில் இருந்து நானே நிறைய மாணவர்களை அனுப்பியிருக்கிறேன். இன்று அவர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த வைல்டுலைப் பயிற்சி நிறுவனம் என்ற சிறப்பு இந்த நிறுவனத்துக்கு உண்டு.
இங்கு வழங்கப்படும் படிப்புகள் உலகத்தரமானவை. 70 சதவிகிதத்துக்கும் மேல் களப்பயிற்சிகள் கொண்ட இந்தப் படிப்புகளுக்கான இடங்கள் குறைவே ஆனாலும் பெரிய அளவில் போட்டி இருக்காது. வனம், உயிரியல், தாவரவியல், மானுடவியலில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு மிகவும் உகந்த படிப்புகள் இவை. இந்த நிறுவனத்தில் இளநிலைப் படிப்புகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. முதுநிலையில் Master's in Wildlife Science, Master's Course in Heritage Conservation and Management ஆகிய இரண்டு படிப்புகள் முக்கிமானவை. Master's in Wildlife Science என்பது M.Sc பட்டப்படிப்பு. இரண்டாண்டுகள் படிக்க வேண்டும். இப்படிப்பை முடித்தவர்கள் Wildlife biologist ஆக உலகெங்கும் பணியாற்றலாம். ஆராய்ச்சிகளில் ஈடுபடலாம். வனத்துறையில் உயர் பொறுப்புக்குப் போகலாம். விலங்குகள் நலனுக்காக இயங்கும் தொண்டு நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளுக்குப் போகலாம். முதல் மூன்று செமஸ்டர்கள் முழுக்கக் களப்பயிற்சிதான். இந்தியா முழுவதும் உள்ள வனப்பகுதிகள், பாலைவனங்கள், சதுப்பு நிலங்கள், கடற்பகுதிகளுக்கெல்லாம் மாணவர்களை அழைத்துச் செல்கிறார்கள். இயற்கையோடு கலந்து அதன் தன்மையை முழுமையாகப் புரிந்து படிக்க மிகச்சிறந்த வாய்ப்பு இது..
சரி, யாரெல்லாம் இந்தப் படிப்பில் சேரலாம்?
இளநிலையில் லைப் சயின்ஸ், மெடிக்கல் சயின்ஸ், இன்ஜினீயரிங், கால்நடை மருத்துவம், வனவியல், சோசியல் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட எந்தப் பிரிவில் பட்டம் பெற்றவர்களும் சேரலாம். பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ படித்து மூன்றாண்டுப் பட்டப் படிப்பு முடித்தால் போதும். பட்டப் படிப்பில் 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விலங்கியல், வேளாண்மை, சமூக அறிவியல் படித்த மாணவர்களை நாங்கள் இந்தப் படிப்புக்கு அனுப்பியிருக்கிறோம். இந்தப் படிப்பில் 20 மொத்தமாகவே சீட்கள்தான். அதிலும் 5 இடங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கு. வெளிநாட்டு மாணவர்கள் வராவிட்டால் அந்த இடங்களில் இந்திய மாணவர்களைச் சேர்ப்பார்கள். இந்தப் படிப்புக்கான மொத்தச் செலவு 6 லட்ச ரூபாய் ஆகலாம். அதேநேரம் நிறைய உதவித்தொகைத் திட்டங்களும் வைத்திருக்கிறார்கள். தகுதியுள்ள மாணவர்களுக்கு பணம் பிரச்னையாக இருக்காது.
மத்திய அரசு கடந்த ஐந்தாண்டுகளில் அனைத்துப் படிப்புகளுக்கான கட்டணங்களையும் பல மடங்கு உயர்த்தி விட்டது. கல்விக்கூடங்களை வருமானம் பார்க்கும் இடமாகக் கருதுவது ஒரு நல்லரசுக்கு நல்லதல்ல என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியது நம் கடமை.
Master's Course in Heritage Conservation and Management படிப்பு Wildlife Science படிப்பைவிட வித்தியாசமானது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்தப் படிப்புக்கான அட்மிஷன் நடக்கும். யுனெஸ்கோ இந்தப் படிப்பை அங்கீகரித்திருக்கிறது. பாரம்பர்ய முக்கியத்துவம் கொண்ட வனங்கள், மலைகள் உள்ளிட்ட சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பது பற்றிய படிப்பு இது.
பாரம்பர்யமான இடங்களைக் கண்டறிவது, பாதுகாப்பது, சுற்றுலாத்தலமாக மாற்றுவது, ஆவணப்படுத்துவது, தட்பவெப்ப தாக்கத்தால் பாதிக்காமல் தக்கவைப்பது, கன்சர்வேஷன் மியூசியங்கள் அமைத்து நிர்வகிப்பது என பல்வேறு விஷயங்களை இந்தப் படிப்பில் மாணவர்கள் படிப்பார்கள்.
இந்தப் படிப்பிலும் வரலாறு, சோசியல் சயின்ஸ், பொறியியல் என எந்த இளநிலைப் பட்டப் படிப்பை முடித்தவர்களும் சேரலாம்.இந்த இரண்டு படிப்புகளுமே உலகளாவிய வேலை வாய்ப்புகளைக் கொண்ட படிப்புகள். சரி, எப்படி இந்தப் படிப்புகளில் சேர்வது?
JOINT CSIR - UGC NET என்ற நுழைவுத்தேர்வை எழுதித் தேர்ச்சிபெற வேண்டும். இந்தச் தேர்வை மத்திய உயர்கல்வித்துறை நடத்துகிறது. இது வைல்டுலைப் குறித்த உங்கள் அடிப்படை அறிவைப் பரிசோதிக்கும் தேர்வு. கட்டுரைகள் எழுதுதல், சரியான விடையைத் தேர்வு செய்தல் என்ற அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். ஓரிரு மாதங்கள் கொஞ்சம் கூடுதலாக உழைத்தால் நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிட முடியும். 25 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே மேற்கண்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேரமுடியும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு ஆன்லைன் டெஸ்ட் நடத்தப்படும். சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற இடங்களில் இந்த டெஸ்ட்டுக்கான மையங்கள் அமைக்கப்படும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு டேராடூனில் நேர்காணல் நடக்கும். அதில் இறுதியாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்தப் படிப்புகள் தவிர, Post Graduate Diploma Course in Advanced Wildlife Management என்ற டிப்ளோமா படிப்பும் இங்கு வழங்கப்படுகிறது. இது பத்துமாதப் படிப்பு. மூன்றுமாத Certificate Course in Wildlife Management படிப்பும் உண்டு. இவையெல்லாம் வனத்துறையில் பணியாற்றுபவர்களுக்கான படிப்புகள். இதுபற்றிய கூடுதல் விவரங்களை இந்த நிறுவனத்தின் www.wii.gov.in இணையதளத்தில் காணலாம். இதுதவிர, NCBS எனப்படும் National Centre for Biological Sciences நிறுவனத்தில் Masters in Wildlife Biology & Conservation என்ற முதுநிலைப் படிப்பு வழங்கப்படுகிறது. இதுவும் மிகச்சிறந்த படிப்பு. Plant - Animal Interactions, Foundations of Ecology, Behavioural Ecology, Marine and Coastal Ecology, Philosophy of Sciences & Conservation, Population Ecology and Estimation, Scientific Writing and Communication என மிகச்சிறந்த பாடத்திட்டங்களைக் கொண்ட படிப்பு இது. இந்த நிறுவனம் பெங்களூரில் இருக்கிறது. JGEEBILS நுழைவுத்தேர்வு வழியாகவே இந்தப் படிப்பில் சேர முடியும். இந்தத் தேர்வு குறித்து நாம் முன்பே விரிவாக ஒரு கட்டுரையில் பார்த்திருக்கிறோம். சிறப்பு என்னவென்றால், இந்த நுழைவுத்தேர்வு எழுதி நல்ல ரேங்க் பெற்றுவிட்டால் ஒரு ரூபாய்கூட செலவில்லாமல் படிப்பை முடித்துவிட்டு வந்துவிடலாம். TATA போன்ற பல நிறுவனங்கள் இந்தப் படிப்புக்கான முழுச் செலவையும் தந்துவிடுகிறார்கள். 50% மதிப்பெண் பெற்று இளநிலையில் எந்தப் பட்டம் பெற்றவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். டிசம்பரில் நுழைவுத்தேர்வு நடக்கும். www.ncbs.res.in என்ற இணையதளத்தில் நவம்பர் 2-ம் தேதி மதியம் 12 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
நன்றி: விகடன்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.