கல்வித்துறை அதிகாரியை மிரட்டிய தனியார் பள்ளி உரிமையாளர் கைது Private school owner arrested for threatening education officer - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 08, 2024

Comments:0

கல்வித்துறை அதிகாரியை மிரட்டிய தனியார் பள்ளி உரிமையாளர் கைது Private school owner arrested for threatening education officer

கல்வித்துறை அதிகாரியை மிரட்டிய தனியார் பள்ளி உரிமையாளர் கைது

நர்சரி பள்ளிக்கு அனுமதி வழங்காததால், மாவட்ட கல்வி உயர் அதிகாரியை தவறாக சித்தரித்து, தொடர்ந்து மிரட்டி வந்த பள்ளி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டை சேர்ந்தவர் ரோஸ் நிர்மலா (60). இவர், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட கல்வி முதன்மை அலுவலராக பணியாற்றி, அண்மையில் ஓய்வு பெற்றார். தற்போது கேளம்பாக்கம் அருகே படூரில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது மகள் வீட்டு முன்பும், வீட்டு கதவிலும் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யப்பட்ட சில துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதேபோன்று, அவரது குடியிருப்புக்கு வரும் தபால்களை போடும் பெட்டிலும் சில தபால்கள் இருந்தன. அவற்றில் ரோஸ் நிர்மலா குறித்தும், அவரது மகள் குறித்தும் ஆபாசமாக எழுதப்பட்டிருந்தது. மேலும், தபாலில் வந்த கடிதங்களுடன் ஆபாச புகைப்படங்களும் இணைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து, ரோஸ் நிர்மலா கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறப்பு தனிப்படை அமைத்தனர். விசாரணையில், ரோஸ் நிர்மலா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, கடலூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தபோது, கடலூர் பகுதியை சேர்ந்த அருண்ராஜ் என்பவர், கடந்த 2022ம் ஆண்டு நர்சரி பள்ளிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

அதில் குறிப்பிட்டிருந்த பகுதிக்கு ஆய்வு நடத்த சென்ற ரோஸ் நிர்மலா, அருண்ராஜ் வீடு மாடி பகுதியில் செயல்பட்டு வருவதை கண்டறிந்துள்ளார். வீட்டின் ஒரு பகுதியில் பள்ளி நடத்த அனுமதி வழங்க முடியாது என்ற விதியை காரணம் காட்டி பள்ளிக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதையடுத்து பலமுறை அருண்ராஜ், முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலாவை அணுகி எப்படியாவது பள்ளிக்கு அனுமதி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், சட்டப்படிதான் செய்ய முடியும் என்று ரோஸ் நிர்மலா மறுத்துவிட்டார். இதையடுத்து, கடலூர் மாவட்டத்தில் ரோஸ் நிர்மலா பணிபுரிந்தபோது, பல்வேறு வழிகளில் அருண்ராஜ் மிரட்டியுள்ளார். இதுகுறித்து ரோஸ் நிர்மலா, கடலூர் மாவட்ட போலீசாரிடம் புகார் கொடுத்திருந்தார். போலீசார் அவரை அழைத்து எச்சரித்து அனுப்பி விட்டனர். இந்நிலையில் பணி ஓய்வுபெற்று விட்டதால், ரோஸ் நிர்மலா செங்கல்பட்டுக்கு திரும்பி விட்டார். அவரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார் அருண்ராஜ். செங்கல்பட்டு வீட்டிலும் அவர் குறித்து அவதூறான கருத்துகளை கம்ப்யூட்டரில் பிரிண்ட் செய்து, வீட்டிலும், வீட்டுக்கு அருகேயும் ஒட்டியுள்ளார். அதேபோன்று, பல்வேறு உயர் அதிகாரிகளுடன் இணைத்து பேசி சில கடிதங்களையும் அனுப்பியுள்ளார்.

இதனால், மன உளைச்சல் அடைந்த ரோஸ் நிர்மலா, தனது மகள் மற்றும் மருமகன் வசிக்கும் படூர் பகுதிக்கு கடந்த ஆண்டு வந்துள்ளார். இதை அறிந்த அருண்ராஜ், அடுக்குமாடி குடியிருப்புக்கும் வந்து அவ்வப்போது சில போஸ்டர்களை ஒட்டி சென்றுள்ளார். மேலும், வீட்டிற்கு ஆபாச கடிதங்களை அனுப்பியுள்ளார். மேலும், ரோஸ் நிர்மலாவின் மகள் நடத்தி வரும் கடைக்கும் சென்று, அவரது மகளை பற்றி அவதூறாக எழுதி சில போஸ்டர்களையும் அருண்ராஜ் ஒட்டியுள்ளார்.இதனால், மன உளைச்சல் அடைந்த ரோஸ் நிர்மலா, தபால்காரரிடம் விசாரித்தபோது, தனக்கு தெரியாது என்றுகூறியுள்ளார். இந்நிலையில் ரோஸ் நிர்மலாவின் உறவினர்கள், அவரைப் பற்றி முகநூலில் அவதூறாகவும், அசிங்கமாகவும் யாரோ விளம்பரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் கேளம்பாக்கம் போலீசில் ரோஸ் நிர்மலா புகார் செய்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் தெரியவந்தன. இதை தொடர்ந்து, கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோஸ் தலைமையிலான தனிப்படையினர், கடலூர் சென்று அருண்ராஜை கைது செய்தனர். விசாரணையில், தனது பள்ளிக்கு அனுமதி தராமல் தனது வாழ்க்கையை சீரழித்து விட்ட ரோஸ் நிர்மலாவை பழிவாங்க அவரது மகள் வீடு, கடை போன்ற இடங்களில் அவதூறான செய்திகளை பரப்பியதாக தெரிவித்தார்.

பிறகு போலீசார் அருண்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews