ஆயுதப்படை காவலர் தேர்வு; தமிழிலும் எழுத அனுமதி Armed Forces Constable Selection; Permission to write in Tamil as well
மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை தவிர, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுதலாம் என, மத்திய அரசு முதன்முறையாக அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய ஆயுதப்படைகளாக, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்ளன.இந்த ஆயுதப்படைகளுக்கான காவலர் தேர்வை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில், எஸ்.எஸ்.சி., எனப்படும், பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய ஆயுதப்படைகளுக்கான காவலர் தேர்வை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை தவிர, 13 பிராந்திய மொழிகளில் எழுதலாம் என, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.இதன்படி அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, கொங்கனி ஆகிய 13 பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின்படியும், 2024 ஜன., 1 முதல், மத்திய ஆயுத காவல் படைகளுக்கான காவலர் தேர்வை, 13 பிராந்திய மொழிகளில் எழுத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆயுத காவல் படைகளில் உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், பிராந்திய மொழிகளை மேம்படுத்தவும் இந்த வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆயுதப்படை காவலர் பணிக்கான தேர்வு, நாடு முழுதும் நேற்று முன்தினம் துவங்கிய நிலையில், மார்ச் 7 வரை நடக்கிறது. 128 நகரங்களில் நடக்கும் இத்தேர்வில், 48 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.