பள்ளி புத்தகத்தை காணும் முன்பே சாதனை புத்தகங்களில் இடம்: அசத்தும் சிறுமி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 26, 2023

Comments:0

பள்ளி புத்தகத்தை காணும் முன்பே சாதனை புத்தகங்களில் இடம்: அசத்தும் சிறுமி



பள்ளி புத்தகத்தை காணும் முன்பே சாதனை புத்தகங்களில் இடம்: அசத்தும் சிறுமி

எதிர்காலத்தில் ஒருவரது சாதனை என்பது அரை மணி நேரம்தான்’ என்பார் எழுத்தாளர் சுஜாதா. அதேபோல், சாதனைக்கும், சாதிக்கவும் வயது தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் திருப்பூரை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி அவீர்ணா. திருப்பூர் - காங்கயம் சாலை பள்ளக்காட்டுபுதூரை சேர்ந்த இவரது தந்தை ஹரிபிரசாத், சொந்தமாக பின்னலாடை நிறுவனத்தை நடத்தி வருபவர். தாயார் பூர்ணிமா. இருவரது ஊக்கத்தால் சிறுமி அவீர்ணா, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், கலாம் வேர்ல்டு ரெக்கார்ட் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார். பாடப்புத்தகங்களை படிக்க பள்ளிக்கு செல்லும் முன்பே, சாதனை புத்தகத்தில் மிளிரத் தொடங்கியுள்ளார் சிறுமி அவீர்ணா.

வாகனங்களின் பெயர்கள், பூக்களின் பெயர்கள், நிறங்கள், பழங்கள், காய்கறிகள், தேசத் தலைவர்கள், உலக அதிசயம், விண்வெளி கோள்கள், தேசிய சின்னங்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை கண்டுபிடித்தவர்கள் என, எந்தவொரு பொருள் மற்றும் நிறம் சார்ந்த படத்தை காட்டினாலும், அந்த படத்தில் என்ன உள்ளது? என்றும், யார் இருக்கின்றனர் என்றும் போகிற போக்கில் சட்டென்று கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்! இது மட்டுமில்லை, ஆங்கில மொழித்திறனில் அசத்துகிறார். ஆங்கிலத்தில் கதை சொல்கிறார், பாடல் பாடுகிறார்... மழலை மொழியில் கேட்க, கேட்க அத்தனை அழகு! பெற்றோருடன் சிறுமி அவீர்ணா இதுதொடர்பாக அவீர்ணாவின் தாயார் பூர்ணிமா கூறும்போது, ‘‘ 3 மாத குழந்தையாக இருந்தபோது, விளையாட்டாக அவளுக்கு பிடித்த விஷயங்களை மறைத்துவைத்து, அவள் நினைவில் வைத்து தேடி எடுப்பாள். அப்போது, மகளின் ஞாபக ஆற்றலை உணர்ந்தேன். தொடர்ந்து வண்ணங்களை சொல்லி கொடுத்தபோது, பிறழாமல் கூறி அசத்தினாள். மேலும், ஊக்கமளிக்கும் வகையில் பழங்கள், காய்கறிகள், தேசத் தலைவர்கள், உலக அதிசயங்கள் என அனைத்தையும் கற்று கொடுத்தேன். அதேபோல், இரவில் கதை சொல்லி கொடுப்பேன். அதுவும், அவளது ஞாபக ஆற்றலை மேம்படுத்த உதவியது. இதையடுத்து, இந்த ஞாபகத் திறனை கூர்மையாக்கி, சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க ஏற்பாடு செய்தோம். எடுத்த எடுப்பிலேயே இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், கலாம் வேர்ல்டு ரெக்கார்ட் ஆகியவற்றில் பதிவு செய்தோம்” என்றார்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரேடியோ, டீசல் இன்ஜின், தொலைக்காட்சி, அலைபேசிகள், மின்சாரம், ஹெலிகாப்டர், சீலிங் பேன் வரை என அத்தனை கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் மிக சர்வ சாதாரணமாக கூறி அசத்துகிறார் சிறுமி அவீர்ணா! நல் விருட்சத்துக்கான விதை துளிர்க்கிறது அவரது சிரிப்பில்..

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews