தனியார் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்பாமல் இருப்பது கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கு எதிரானது: நீதிமன்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 26, 2023

Comments:0

தனியார் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்பாமல் இருப்பது கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கு எதிரானது: நீதிமன்றம்

1173963


தனியார் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்பாமல் இருப்பது கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கு எதிரானது: நீதிமன்றம்

வசிப்பிட தூர விதிகளை காரணம் காட்டி மாணவர் சேர்க்கை வழங்காமல் தனியார் பள்ளிகளில் உள்ளகாலியிடங்களை பூர்த்தி செய்யாமல் இருப்பது கட்டாயக்கல்வி உரிமை சட்டத்துக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த லட்சுமணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனது மகனுக்கு வால்பாறையில் உள்ள பியூலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டவிதிகளின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கக் கோரி கடந்த ஆண்டு மே மாதம்விண்ணப்பித்தேன். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த பள்ளி நிர்வாகம், எங்கள் வீடு பள்ளியில் இருந்து 1 கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருப்பதாகக் கூறி, எனது விண்ணப்பத்தை நிராகரித்தது. அதன்பிறகு உரிய கல்விக் கட்டணம் செலுத்தி எனது மகனைஎல்கேஜி வகுப்பில் சேர்த்தேன். எனது மகனுககு உரிய காலகட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கை வழங்காமல், வசிப்பிட தூரத்தை காரணம் காட்டி விண்ணப்பத்தை நிராகரித்திருப்பது ஏற்புடையதல்ல. எனவே, எனது மனு மீது உரியநடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்துக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்துள்ள உத்தரவு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளின்படி மாணவர் சேர்க்கை வழங்க வசிப்பிட தூரம் குறித்த விதிகள் கட்டாயம் கிடையாது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத இடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் காலியாக இருந்தால் அந்த இடங்களை நிர்ணயிக்கப்பட்ட தூரத்துக்கு அப்பால் வசிப்பவர்களைக் கொண்டும் நிரப்ப எந்த தடையும் இல்லை. காலியாக விடப்பட்ட இடங்கள்: குறிப்பிட்ட பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில் 2022-23-ம் ஆண்டில் 13 இடங்களும், 2023-24கல்வியாண்டில் 8 இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளன. காலியிடம் இருக்கும்போது வசிப்பிட தூர விதிகளை காரணம் காட்டி, அந்த இடங்களை நிரப்பாமல் இருப்பது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்துக்கு எதிராக அமைந்து விடும்.

அந்தப் பகுதியில் பியூலா மெட்ரிக் பள்ளியை தவிர்த்து வேறு பள்ளி ஏதும் இல்லாததால் மனுதாரரின் மகனுக்கு 3 வாரங்களில் கட்டாயக் கல்வி சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை வழங்குவதை பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். எல்கேஜி மாணவர் சேர்க்கைக்காக பள்ளி நிர்வாகம் வசூலித்த கட்டணத்தை 2 வாரங்களில் மனுதாரரிடம் திருப்பிச் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
IMG-20231226-WA0012

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84602067