கோரிக்கையை ஏற்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்: ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர்கள் பேச்சு
சென்னை: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் போராட்ட குழு அறிவித்துள்ளது. சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் கல்வி வளாகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் இரவு பகலாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முடிவில் தமிழ்நாடு முதல்வரிடம் உங்கள் கோரிக்கை குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூறி கல்வித்துறை அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எனினும், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று கூறி பிடிவாதமாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நேற்று அழைத்த, பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, அவர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கோவன் கூறியதாவது: கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக அப்போது எங்களுக்கு ஆதரவு அளித்தது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும் எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் வழங்கி பள்ளிகளில் கரும்பலகையை தூய்மை செய்வது, கழிவறையை தூய்மை செய்வது போன்ற பணிகளை கொடுத்தாலும் செய்ய தயாராக இருக்கிறோம். அரசுப் பள்ளிகளில் நாங்கள் பணியில் சேர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.