சென்னை ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை, ஓய்வுபெற்ற டிஜிபி திலகவதி தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நடப்பாண்டில் மட்டும் 4 பேர் தற்கொலை செய்துள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் சச்சின் குமார் கடந்த 31-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சர்ச்சைக்குஉள்ளானது.
இதில், மாணவரின் வழிகாட்டிப் பேராசிரியருக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி, ஐஐடி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரிக்க குழு அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவைச் சென்னை ஐஐடி அமைத்தது. அந்தக் குழுவில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.சபிதா, ஐஐடி பேராசிரியர் ரவீந்திர கீத்து உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.
இந்தக் குழு மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பல்வேறு கருத்துகளைப் பெற்றது. பல்வேறு கட்ட விசாரணைகளின் அடிப்படையில், 700 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை அந்தக் குழு தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த அறிக்கையை திலகவதி தலைமையிலான குழுவினர் ஐஐடி இயக்குநர் வீ.காமகோடியிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், ஐஐடி பேராசிரியர்கள், மாணவர்கள் இடையே இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும். மாணவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்வதுடன், அவர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் உட்பட அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இந்த அறிக்கையை பொது வெளியில் வெளியிட்டு, தொடர் நடவடிக்கைகளை ஐஐடி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை ஐஐடி நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விசாரணைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி நிறுவன தலைமை அந்த அறிக்கையை மறு ஆய்வு செய்து,கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கும். நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்குப் பின்னர், பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்தப் பரிந்துரைகள் பொது வெளியில் பகிரங்கமாக வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.