அரசு ஒதுக்கீட்டில் MBBS இடங்கள் நிரம்பியது: மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 08, 2023

Comments:0

அரசு ஒதுக்கீட்டில் MBBS இடங்கள் நிரம்பியது: மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தகவல்

அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரம்பியது: மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தகவல்

அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள அனைத்து எம்.பி.பி.எஸ் இடங்களும் நிரம்பி விட்டது என மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

2023-24ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 25ம் தேதி தொடங்கியது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போக மீதமுள்ள சுமார் 10 ஆயிரம் இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கடந்த மாதம் 27ம் சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. அத்துடன்அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீடு கொண்ட சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 6,226 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1,767 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்காக கடந்த 25ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கியது. ஆன்லைன் வழியாக நடந்த இக்கலந்தாய்வில் 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். சிறப்பு பிரிவினர் தங்களுக்கான ஒதுக்கீட்டு கடிதத்தை பதிவிறக்கம் செய்து அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும். கல்லூரிகளில் சேருவதற்கு 11ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு கூறுகையில்: அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அனைத்து அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பி விட்டன.

அதே போல் அரசு கல்லூரிகளில் உள்ள பி.டி.எஸ். இடங்களும் நிரம்பின. நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள அரசு எம்.பி.பி.எஸ் இடங்களும் நிரம்பி விட்டன. தனியார் கல்லூரிகளில் உள்ள சிறுபான்மையினருக்கான 96 இடங்கள் நிரப்பப்படவில்லை.

சுயநிதி கல்லூரிகளில் பி.டி.எஸ். இடங்கள் 54 காலியாக உள்ளன. என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பவில்லை. 11ம் தேதி மாலைவரை கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. இது போல் ஏற்படும் காலி இடங்கள் பட்டியல் எடுக்கப்பட்டு 2வது கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் மொத்தம் 4 கட்டமாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும். இந்த மாதம் இறுதிக்குள் பெரும்பாலான மருத்துவ இடங்கள் நிரம்பி விடும். செப்டம்பர் 1ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews