கணினி அறிவியலை கட்டாயப் பாடமாக்குங்கள்.ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் வேண்டுகோள்
தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் கற்பிக்கப்படுகிறது.அரசுப் பள்ளிகளிலோ 11 ஆம் வகுப்பில் தான் கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது.அதிலும் அந்தப் பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பவர்கள் மட்டுமே கணினி அறிவை பெற முடியும்.
இன்று டீ கடை முதல் உயர் அலுவலகங்கள் வரை கணினி பயன்பாடு வந்து விட்டது.
கணினி இல்லாமல் இனி உலகம் இல்லை என்ற சூழ்நிலை உள்ளது.
சந்திராயன் 3 விண்கலம் நிலவில் நிலைநிறுத்தப்பட்டது என்பது இந்தியாவின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று.
இந்த திட்டத்தில் பணிபுரிந்த விஞ்ஞானிகள் எல்லாம் அறிவியலாளர்கள் என்றாலும் இந்த திட்டம் வெற்றி பெற கணினியின் பயன்பாடும் மிக முக்கியமானதாகும்.
விண்கலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது,அதற்கான கட்டளைகளை இடுவது என அனைத்தும் கணினி மூலமாகவே நடந்தது.
இத்திட்டத்தின் திட்ட இயக்குநர் திரு.வீரமுத்துவேல்,இதற்கு முந்தைய சந்திராயன் 1 திட்டத்தின் திட்ட இயக்குநர் திரு.மயில்சாமி அண்ணாதுரை,சந்திராயன் 2 திட்டத்தின் திட்ட இயக்குநர் திருமதி.வனிதா முத்தையா மங்கள்யான் திட்டத்தின் திட்ட இயக்குநர் திரு.சுப்பையா அருணன் மற்றும் முன்னாள் இஸ்ரோ தலைவர் திரு.சிவன் ஆகியோர் தமிழர்கள் என்பது நமக்கு பெருமை.
இதுபோல் கணினி உலகில் தமிழர்கள் பலர் கோலோச்சி வருகிறார்கள்.இவர்கள் எல்லாம் கல்லூரி படிப்பில் தான் கணினி அறிவியலை பயின்றிருப்பார்கள். இந்நிலையில் 6 ஆம் வகுப்பில் இருந்தே கணினி அறிவியலை கட்டாயப் பாடமாக்கினால் நம் தமிழ்நாட்டில் இருந்து இன்னும் பல பல சாதனையாளர்கள் வரக்கூடும்.அது உலக அளவில் நம் தமிழ்நாட்டிற்கு பெருமையை தேடித்தரும்.நம் மாநிலத்தில் தொழில் வாய்ப்புகள் பெருகும்,வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்,தமிழகத்தின் பொருளாதாரம் உயரும்.
ஏற்கனவே கல்வியறிவில் நாம் மற்ற மாநிலங்களை விட பல மடங்கு முன்னணியில் உள்ளோம்.கணினி அறிவியலை கட்டாயப்பாடமாக்கினால் நம்மை வேறு எந்த மாநிலங்களாலும் வெல்ல முடியாத நிலையை அடைவோம்.
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயரும்.
மொழியானாலும்,அறிவியல் ஆனாலும்,கல்வியானாலும் காலத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்வதே நீடித்து நிலைத்து நிற்கும்.அதுவே நாட்டையும்,நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும்.
எனவே மாண்புமிகு.முதல்வர் அவர்களும்,மாண்புமிகு.பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களும் நாட்டின் நலன் மற்றும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வரும் கல்வியாண்டு முதல் 6 ஆம் வகுப்பில் இருந்து கணினி அறிவியலை கட்டாயப் பாடமாக கொண்டு வரவேண்டும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
பழ.கௌதமன்,
மாநிலத் தலைவர்,
ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.