நான்கு மாதங்களாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளுக்கான விடுதிகளுக்கு உணவு தொகை வழங்காமல் இருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 18, 2023

Comments:0

நான்கு மாதங்களாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளுக்கான விடுதிகளுக்கு உணவு தொகை வழங்காமல் இருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!



ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவிடுதிகளுக்கு கடந்த நான்கு மாதங்களாக உணவு தொகை வழங்காமல் இருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனம்.



ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தமிழகத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கும் மாணவ-மாணவியர்களுக்கான விடுதிகளுக்கு தேவையான உணவு நிதி, கடந்த நான்கு மாதங்களாக திமுக தலைமையிலான அரசால் வழங்கப்படாமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கான விடுதிகள். அதேபோன்று கல்லூரிகள், ஐ டி ஐ, பாலிடெக்னிக் மற்றும் பட்ட மேற்படிப்பு கல்லூரி போன்றவற்றுக்கான விடுதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இதில் மாணவர் விடுதிகள் 8,37, மாணவியர் விடுதிகள் 494 என மொத்தம் 1331 விடுதிகள் செயல்படுகின்றன.

இதேபோன்று பழங்குடியினருக்கான அரசு உண்டு உறைவிட பள்ளிகள் 320 மற்றும் பழங்குடியினருக்கான 48 நலவிடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் தங்கி படிக்கின்றனர். இங்கு தங்கி படிக்கும் மாணாக்கர்களின் உணவு தேவைக்காக, கல்லூரி மாணவருக்கு மாதம் 1100 ரூபாயும், பள்ளி மாணவருக்கு மாதம் 1000 ரூபாயும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் தான் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவ-மாணவியருக்கு மாத உணவுப்படி உயர்த்தி வழங்கப்பட்டது.

இந்த நிதியை பயன்படுத்திதான் மட்டன், சிக்கன், முட்டை, காய்கறி, கொண்டக்கடலை, பயறு வகைகளை வாங்கி உணவு தயாரிக்கப்பட்டு மாணாக்கர்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து உணவிற்கான தொகையை தமிழக அரசு வழங்கவில்லை என்று விடுதி காப்பாளர்கள் சொல்லி வேதனைப்படுகின்றனர். இதன் காரணமாக வேறு வழியின்றி, விடுதி காப்பாளர்கள் கடன் வாங்கி உணவு தயாரித்து கொடுப்பதாக தெரியவருகிறது. இதனால் மாணவர்களுக்கு முறையாக உணவை ஏற்பாடு செய்து தர முடியாமல் அலுவலர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்தாண்டு ரூ.4,281,76 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது ஆனால் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ.3,513 கோடி அளவுக்கு குறைத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த அளவுக்கு குறைத்து நிதியை ஒதுக்கீடு செய்தது ஏன்? என்று தெரியவில்லை.

தற்போது திமுக தலைமையிலான அரசு கடந்த நான்கு மாதங்களாக ஆதிதிராவிடர் நலவிடுதிகளுக்கு உணவு தொகை கூட வழங்காமல் இருப்பதை பார்க்கும்போது இந்த துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.3.5/3 கோடி நிதியை திமுகவினர் என்னதான் செய்தனர்? என்பது புரியாத புதிராக இருக்கிறது.

திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. இதுவரை மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்தவில்லை. திமுகவினரிடமிருந்து நாள்தோறும் வெற்று மேடைப்பேச்சுகளும், ஆனால் வீர வசனங்களும் தான் வந்த வண்ணம் இருக்கிறது.

திமுகவினர் அறிவித்த எத்தனையோ திட்டங்கள் இன்று வரை வெறும் அறிவிப்புகளாகவே இருக்கின்றன.

திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களிடமிருந்து வாக்குகளை வாங்கினால் மட்டும் போதுமா? கொடுத்த வாக்குறுதிகளை, நிறைவேற்ற வேண்டாமா?

நாள்தோறும் வாய்கூசாமல் பொய்களை பேசி மக்களை தொடர்ந்து ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம். இதுபோன்று இன்னும் எத்தனை காலத்திற்கு வேஷம் போடுவீர்கள்? விரைவில் தமிழக மக்களுக்கு நல்லதொரு விடிவுகாலம் பிறக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலவிடுதிகளில் உணவுத்தொகையை வழங்க எந்தவித முயற்சியும் எடுக்காமல் தான் உண்டு, தன் குடும்பம் உண்டு. என பொழுதை கழிக்கும் திமுகவினர் திரைப்படங்களில் தங்களை ஏதோ சமூக நீதி காவலர்கள் போலவும், ஓடுக்கப்பட்ட மக்களின் காவலர்கள் போலவும் தங்களை தாங்களே விளம்பரப்படுத்தி கொள்வதால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

இந்த உண்மைகள் நன்றாக தெரிந்தும், திமுகவினரோடு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சியை சேர்ந்தவர்களோ தங்கள் சுய லாபத்திற்காக தொடர்ந்து திமுகவினருக்கு துதி பாடிவருவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. திமுகவினர் எவ்வளவு செலவு செய்து சுய விளம்பரம் தேடினாலும் தமிழக மக்கள் யாரும் அவர்களை இனிமேல் நம்பப்போவது இல்லை.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் செயல்படும் அனைத்து மாணவர் நலவிடுதிகளுக்கு கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், கல்விச்சூழல், உணவு தரம், பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவை குறித்து தமிழக அரசு உடனே ஆய்வு செய்திட வேண்டும்.

மேலும், ஆதிதிராவிடர் நலவிடுதிகளுக்கு நான்கு மாத காலமாக நிலுவையில் உள்ள உணவுக்கான தொகையை காலதாமதமின்றி உடனே வழங்கிட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews