அவசரமாக கேட்டாங்க குறைகளை ஆனால் அலட்சியப்படுத்துறாங்க; ஆசிரியர்கள், அலுவலர்கள் புலம்பல்
மதுரை: கல்வித்துறையில் இயக்குனராக அறிவொளி பொறுப்பேற்ற பின் அமைச்சர் மகேஷ், செயலாளர் காகர்லா உஷா முன்னிலையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத சங்கங்களை அழைத்து துறை ரீதியாக கேட்கப்பட்ட குறைகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் 'கிணற்றில் போட்ட கல்' ஆக உள்ளது என நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
இத்துறை கமிஷனர் பதவி வகித்த நந்தகுமார் மாற்றப்பட்ட பின் அப்பணியிடம் நிரப்பப்படாமல், முன்பு இருந்தது போல் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு முழு பொறுப்பு அளிக்கப்பட்டது. இப்பதவியில் அறிவொளி நியமிக்கப்பட்ட பின் 'அவரிடம் கோரிக்கைகளை எளிதாக கொண்டு செல்ல முடியும்' என ஆசிரியர்கள், அலுவலர்கள் நம்பினர். அதற்கேற்ப, அமைச்சர், செயலாளருடன் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத சங்க நிர்வாகிகள் கலந்துரையாடலுக்கு ஜூன் 22, 24 ல் இயக்குனரும் ஏற்பாடு செய்தார். அக்கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட முக்கிய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில், 'இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் நிர்ணயம் செய்தல், மாநில அளவில் 30 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர், அலுவலர்களுக்கான சரண்டர், ஊக்கத் தொகை வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டும். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளுக்கான 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை 10 ஆக அதிகரிக்க வேண்டும். அரசு பாடப் புத்தகங்களை பள்ளிகளிலேயே நேரடியாக இறக்கி வைக்க நிதி ஒதுக்கியுள்ளதால் அதை பின்பற்ற கடும் உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் அளிக்கப்பட்டன. இவற்றின் மீது விரைவில் நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்த்த ஆசிரியர்கள், அலுவலர்கள் தற்போது அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் கூறியதாவது:
கமிஷனர் நந்தகுமார் இருந்த வரை ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கங்கள் நேரடியாக அவரை அணுகி குறைகள், கோரிக்கைகளை தெரிவிப்பதில் சிரமம் இருந்தது. இயக்குனர்களும் 'டம்மி' ஆக்கப்பட்டிருந்தனர். இந்த நிலை மீண்டும் முழு அதிகாரத்தில் இயக்குனராக அறிவொளி நியமிக்கப்பட்டதும் நம்பிக்கையுடன் துறைரீதியான குறைகள், கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் நடவடிக்கைக்கான அறிகுறி இல்லை. குறிப்பாக 13 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் பிரச்னைக்கு தீர்வுகாண அதிகாரிகள் குழு அமைத்தும் முடங்கி கிடக்கிறது. அதிகாரிகள் அலட்சியம் ஏமாற்றமளிக்கிறது. ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் நடத்தும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.