பி.எஸ்சி., கணித பட்டப்படிப்பு ஐ.ஐ.டி.,யில் விரைவில் துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 19, 2023

Comments:0

பி.எஸ்சி., கணித பட்டப்படிப்பு ஐ.ஐ.டி.,யில் விரைவில் துவக்கம்

பி.எஸ்சி., கணித பட்டப்படிப்பு ஐ.ஐ.டி.,யில் விரைவில் துவக்கம்

'திறன் மிக்க ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், பி.எட்., உடன் இணைந்த பி.எஸ்சி., கணித படிப்பு, சென்னை ஐ.ஐ.டி.,யில் துவங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கையின் மூன்றாண்டு நடவடிக்கைகள் குறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி அளித்த பேட்டி:புதிய கல்வி கொள்கையை பின்பற்றி, பல்வகை படிப்புகள் துவங்கியுள்ளோம்.

பி.எஸ்., டேட்டா சயின்ஸ், பி.எஸ். மெடிக்கல் சயின்சஸ் படிப்புகள் துவங்கி, அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பி.எஸ்., டேட்டா சயின்சில், 20,000க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர்.

மெடிக்கல் சயின்சில், 9,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.வெளிநாட்டில் உயர்கல்வி நிறுவனத்தை துவங்கும் நோக்கில், கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில், ஐ.ஐ.டி., நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் இரண்டு புதிய படிப்புகள் துவங்கப்பட்டு, அவற்றுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.சர்வதேச அளவில் ஆர்வமுள்ள நிறுவனங்களை, ஐ.ஐ.டி.,யின் புதிய, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களாக்க முயற்சித்து வருகிறோம்.

கடந்த ஆண்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, 240 காப்புரிமைகள் பெற்றோம். இந்த ஆண்டு, 365 காப்புரிமைகள் பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம்.பி.எஸ்., ட்ரோன் டெக்னாலஜி படிப்பு துவங்க உள்ளோம். பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு படிப்புகள் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இதற்காக, பி.எஸ்சி., கணிதம் மற்றும் கணினி அறிவியல் என்ற ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பு துவங்க உள்ளோம். இதற்கு தேசிய கல்வியியல் கவுன்சிலின் அங்கீகாரம் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கணிதம் என்பது மிகவும் முக்கியமானது. கணித பாடத்தில் திறன் பெற்ற ஆசிரியர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். கணித ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்று, உலக அளவில் சீனா முன்னிலை வகிக்கிறது.கணிதம் இல்லை என்றால், அறிவியலும், கண்டுபிடிப்புகளும் இல்லை.

எனவே, கணிதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இளைய தலைமுறை மாணவர்கள், கணிதத்தை பார்த்து அச்சப்படாமல், அதனை விளையாட்டாக கற்று கொள்ள வேண்டும்.கணித பட்டப்படிப்பில் அதிக மாணவர்கள் சேர வேண்டும். இன்னும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை, ஐ.ஐ.டி., மாணவர்கள் வழியே துவங்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். ஐ.ஐ.டி.,யின் வெற்றி பயணம்புதிய கல்வி கொள்கையை சென்னை ஐ.ஐ.டி.,யில் அமல்படுத்தி, வெற்றி பெற்றது குறித்து, பேராசிரியர்கள் ரகுநாதன், பாபி ஜார்ஜ், விக்னேஷ் முத்துவிஜயன், பிரபு ராஜகோபால், சங்கர்ராமன் ஆகியோர் அளித்த பேட்டி: அனைவருக்கும் ஐ.ஐ.டி., என்ற திட்டத்தில், பி.எஸ்., டேட்டா சயின்ஸ், மெடிக்கல் சயின்ஸ் போன்ற படிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 81 வயதான ஒருவர் பி.எஸ்., டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்ந்துள்ளார்.

கிராமப்புற மாணவர்களுக்காக, 189 ஊரக படிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, ஆன்லைனில் மாலை நேர டியூஷன் நடத்தப்படுகிறது.

தமிழகம் மற்றும் உ.பி.,யில், 12,000 பேர் பயன்பெற்றுள்ளனர். ஊரக தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டு, கணினி பழுதுபார்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது

ஐ.ஐ.டி.,யில், 14 வகையாக இரட்டை பட்டப்படிப்பு துவங்கப்பட்டு, பல்வேறு மாநில மாணவர்கள் தங்களது வழக்கமான படிப்புடன், இந்த படிப்பிலும் சேர்ந்துள்ளனர்

ஐ.ஐ.டி.,யின், பி.டெக்., ரெகுலர் மாணவர்களுக்கு, புதிய கல்வி கொள்கையின்படி, எந்த ஆண்டும் சேரவும், வெளியேறி மீண்டும் சேர்வதற்கும், உரிய படிப்பு முறைகளை துவங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது

புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு ஐ.ஐ.டி.,யில் 15 குழுக்கள் செயல்படுகின்றன. தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, பணி நியமனமும், மாணவர் சேர்க்கையும் நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews