கொரோனாவால் இழந்த கல்வியை மீட்ட தமிழக அரசின் உன்னதமான திட்டம் 2ம் ஆண்டில் வெற்றி நடைபோடும் இல்லம் தேடி கல்வி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 18, 2023

Comments:0

கொரோனாவால் இழந்த கல்வியை மீட்ட தமிழக அரசின் உன்னதமான திட்டம் 2ம் ஆண்டில் வெற்றி நடைபோடும் இல்லம் தேடி கல்வி

கொரோனாவால் இழந்த கல்வியை மீட்ட தமிழக அரசின் உன்னதமான திட்டம் 2ம் ஆண்டில் வெற்றி நடைபோடும் இல்லம் தேடி கல்வி Tamil Nadu government's noble scheme to restore the education lost due to Corona is the successful implementation of the 2nd year of education in search of homes

*விருதுநகர் மாவட்டத்தில் 3,991 மையங்களில் 35,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர்

திருவில்லிபுத்தூர் : தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு தமிழகம் மக்களின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதில் முக்கிய திட்டங்களில் ஒன்றாக கொரானா காலத்தில் இழந்த கல்வியை மீட்கும் வகையில் மாணவர்களுக்காக தமிழக பள்ளி கல்வி துறையின் சார்பில் உருவான உன்னதமான திட்டம்தான் இந்த இல்லம் தேடி கல்வி திட்டம்.

எந்த நோக்கத்துக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டதோ அந்த வகையில் ஓர் ஆண்டை வெற்றிகரமாக முடித்து இரண்டாம் ஆண்டில் சிறப்பாக செயல்படுகிறது இத்திட்டம். இந்த இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களின் இரண்டாமாண்டு துவக்க விழா நிகழ்வுகள் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தன்னார்வலர்கள் சிறப்பாக கேக் வெட்டி மாணவர்களுக்கு வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கொரோனாவால் இழந்த கல்வியை மீட்கும் உன்னதமான திட்டம்

கொரோனா காலத்தில் மாணவர்கள் இழந்த மற்றும் விடுபட்ட கல்வியை மீட்டெடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு உத்திகளை கையாண்டது. இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் மூலமாக ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தியது. மேலும் இத்திட்டத்திற்கு தன்னார்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுஅவர்களுக்கு எழுத்து தேர்வு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்திதி, தொடக்கநிலை மற்றும் உயர் தொடக்க நிலை மையங்களை தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் முதற்கட்டமாக கடந்த 2000 ஆண்டு அக்டோபர் 27ல் 12 மாவட்டங்களில் பரீட்சார்த்த முயற்சியாக துவக்கி வைத்தார். பின்னர் இத்திட்டம் அனைத்து தரப்பினரின் ஏகோபித்த ஆதரவினை பெற்றதால் தமிழகத்தில் மீதம் உள்ள 26 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் இல்லம் தேடி கல்வி திட்டம் இந்திய தேசம் முழுமைக்குமான ஒரு முன்னோடி திட்டம் என பல்துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் பாராட்டினை பெற்றதால், இத்திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் சிறப்பு அலுவவராக இளம் பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இவர் இல்லம் தேடி கல்வி திட்டம் மிகச்சிறப்பாக செயல்படும் வகையில் பல்வேறு தொழில் நுட்ப குழுமங்களை உருவாக்கி, அதில் தன்னார்வலர்களை இணைத்து, மையங்களில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை பதிவேற்றம் செய்ய சொல்லி, பொது மேடைகளில் தன்னார்வலர்களை தொடர்ந்து பாராட்டியும், ஊக்கப்படுத்தியும் வருகிறார். மேலும் மாணவர்கள், தன்னாவலர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் விதமாக \”தொடு வானம்\” மற்றும் \”தேன் சிட்டு\” மின்னிதழ்களை நடத்தி வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் 2022 ஜன.3ல் துவக்கம்

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை இல்லம் தேடி கல்வி திட்டம் 2022 ஜனவரி 3ம் தேதி தொடங்கப்பட்டது.கொரோனா பெருந்தொற்றால் சுமார் 2 ஆண்டுகள் படிப்பை இழந்து நின்ற தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம். மாணவர்களின் கற்றல் இழப்புகளை ஈடுசெய்யவும், அவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாகவும் இத்திட்டம் செயல்படுகிறது. விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி ஆகியோரின் நேரிடி கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் பேரில் இத்திட்டம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் மாவட்டத்தில் 3,991 மையங்களில் சுமார் 35 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மாலை நேரங்களில் பயின்ரு வருகிறார்கள். இவர்களுக்கு தன்னார்வலர்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை கற்று கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த மையங்கள் மாணவர்களுக்கு நல்வழிகாட்டும் மற்றும் பள்ளியில் கற்ற பாடங்களை நினைவுபடுத்தி தொடர்ந்து கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகிறதுஇத்திட்டத்தில் இன்னும் சேராத மாணவர்களை குடியிருப்பு வாரியாக கணக்கெடுத்து சேர்க்கும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வரின் கனவு திட்டமான 2025ம் ஆண்டிற்குள் தொடக்க நிலையில் அனைத்து மாணவ, மாணவியரும் புரிந்து எழுத படிக்க மற்றும் கணிதத்தில் அடிப்படை திறன்களை பெற்றிட வேண்டும் என்ற உயரிய திட்டத்தை நிறைவேற்றும் வகையில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலர் இளம் பகவத், இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்கிறார். ரீடிங் மாரத்தானில் திருவில்லி. மாணவர் முதலிடம்

கோடை விடுமுறையிலும் கற்றல் இடைவெளி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ரீடிங் மாரத்தான் என்ற ஒரு நிகழ்ச்சியை, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ரீடிங் அலோன் என்ற செயலி மூலம் 2022 ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி முடிய இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களுக்கு வரும் மாணவ, மாணவியருக்கு நடத்தியது.இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களில் படிக்கும் மாணவர்கள் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு 3,61,73,401 வார்த்தைகளை சரியாக வாசித்துள்ளனர்.

இந்த செயலியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் கதைகள், எழுத்து விளையாட்டு, மாறியுள்ள சொற்களை வரிசைப்படுத்துதல், வார்த்தைகளை வேகமாக வாசித்தல் என மாணவர்களது ஆர்வத்தை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் வாசிக்கும் மற்றும் ஒவ்வொரு சரியான செயல்பாட்டிற்கும் ஸ்டார்கள் வழங்கப்பட்டது. இதில் திருவில்லிபுத்தூர் ஒன்றியம், வைத்தியலிங்காபுரம் தொடக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவர் சிவமகேஸ்வரன் 9,00,829 ஸ்டார்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இதுகுறித்த செய்தியை அறிந்த மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை அழைத்து ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார். அன்புள்ள அக்காவிற்கு வாழ்த்து கடிதம்

ஆசிரியர் தினத்தையொட்டி, தங்களுக்கு கற்று தரும் தன்னார்வலர்களை கடுரவிக்கும் வகையில் அன்புள்ள அக்காவிற்கு என வாழ்த்து கடிதம் எழுதி மாணவர்கள் அதனை தன்னார்வலர்களுக்கு வழங்க சிறப்பு அலுவலர் கேட்டு கொண்டிருந்தார். இதன்படி மாணவர்கள் தங்களுக்கு கற்று தரும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு கடிதம் அளித்து, அதனை சிறப்பு அலுவலரின் டெலகிராம் குழுவில் புகைப்படம் எடுத்து பதிவிட்டனர்.

வீடுதோறும் தேசியக் கொடி

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் 2022 ஆகஸ்டு 15ம் தேதி வீடுதோறும் தேசிய கொடி ஏற்ற கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன்பு இருந்து சுமார் 300 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கைகளில் தேசிய கொடி ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியே பேரணியாக வந்தனர். மேலும் சுதந்திர தினத்தன்று வீடுகளில் மாணவர்கள் கொடியேற்றி அதனை குறிப்பிட்ட செயலியில் படமாக பதிவேற்றம் செய்து சான்றிதழ் பெற்றனர்.

புத்தக திருவிழா

விருதுநகரில் முதன்முதலாக நடைபெற்ற புத்தக திருவிழாவில், இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் கற்றல், கற்பித்தல் உபகரண கண்காட்சி நடைபெற்றது. இதனை பார்வையிட்ட சிறப்பு அலுவலர் இளம் பகவத், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி ஆகியோர் தன்னார்வலர்களை வெகுவாக பாராட்டினர். தன்னார்வலர்கள்

தன்னார்வலர்களாக பணிபுரிவோர் பெரும்பாலும் உயர்கல்வி கற்றவர்கள். இவர்கள் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உறுதுணையாக உள்ளார்கள். குழந்தைகளின் இயல்புகளை புரிந்து கொண்டு அவர்களின் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து உள்ளார்ந்த திறன்களையும், படைப்பாற்றலையும் வெளிக்கொணரும் வகையில் இவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருவில்லிபுத்தூர் பகுதியில் சிறப்பாக செயல்படும் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து திருவில்லிபுத்தூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் கூறுகையில், ‘தமிழக பள்ளிக்கல்வி துறையில் சார்பில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் மிகச்சிறப்பான திட்டம் மட்டுமின்றி வெற்றிகரமான திட்டமாகவும் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்து ஓர் ஆண்டை வெற்றிகரமாக கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த சிறப்பான திட்டத்தினால் விடுமுறை நாட்களிலும் மையங்களை தேடி ஓடி வரும் அளவிற்கு மாணவர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களை நேசிக்கிறார்கள். தன்னார்வலர்கள் புது புது உத்திகளை கையாண்டு பள்ளி செல்லா மாணவர்களையும் தங்களது மையத்திற்கு வரவழைத்து கல்வியின்பால் ஆர்வத்தை தூண்டி, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நிகழ்ச்சிகளும் திருவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், நூலகத்தின் பயன்பாட்டை அறிந்து கொள்ளவும், திருவில்லிபுத்தூரில் உள்ள அரசு நூலகத்திற்கு மாணவ, மாணவியரை தன்னார்வலர்கள் அழைத்து சென்று நூலக நடைமுறைகளை விளக்கி உறுப்பினர்களாக சேர்த்துள்ளார்கள். ஆசிரியர் தினத்தன்று ஒருங்கிணைப்பாளர், மையங்களுக்கு வரும் ஏழை மாணவ, மாணவியர் 33 பேருக்கு புத்தாடைகள், நோட்டுகள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார். தீபாவளி பண்டிகையின் போது திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களுக்கு வருபவர்களில் பெற்றோரை இழந்த 126 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, 2022 அக்டோபர் 12ம் தேதி அவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமையில் புத்தாடைகள் வழங்கப்பட்டது. திருவில்லிபுத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன், துணை தலைவர் செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு உத்தரவுப்படி மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி முதன்மை கல்வி அலுவலர் ஞான கௌரி ஆகியோர் வழிகாட்டுதலின்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதால் வெற்றிகரமாக ஆண்டு ஒன்று முடிந்து இரண்டாம் ஆண்டு தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews