ஆறு மகள்களையும் ஆசிரியராக்கிய லட்சிய தாய் ராணியம்மா Raniamma was an ambitious mother who educated all her six daughters
தினமலர் இதழின் இணைப்பாக வாரமலர்,ஆன்மீகமலர்,சிறுவர்மலர் வருவது போல மாணவர்களுக்காகவே பட்டம் சிறப்பிதழ் வருவதும் அனைவரும் அறிந்ததே
பட்டம் மாணவர் பதிப்பின் சார்பாக மாவட்டம் தோறும் சிறந்த பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இலட்சிய ஆசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் நடந்த இலட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழாவில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ ஆர்எம் ஜெயின் பள்ளியைச் சேர்ந்த ஐடா என்ற தமிழ் ஆசிரியைக்கு விருது வழங்கப்பட்டது.
விருது பெறும் போது எனது இந்தப் பெருமைக்கு முக்கிய காரணமான என் தாயார் உடனிருந்தால் இன்னும் சந்தோஷப்படுவேன் என்றார்
நிச்சயமாக,அது எங்களுக்கும் சந்தோஷம் தரும் நிகழ்வுதான் என்ற விழாக்குழுவினர் ஐடாவின் தாயார் ராணி அம்மாவை ஐடாவின் பக்கத்தில் நிறுத்தினர் அப்போது சமூகத்திற்கு நல்லதொரு ஆசிரியரை தந்த உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்திய போது, அவசரமாக மைக்கை வாங்கிய ஐடா, ‛ஒரு ஆசிரியரை அல்ல ஆறு ஆசிரியரை என் அம்மா வழங்கியுள்ளார்' என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.
கொஞ்சம் விரவாக சொல்லமுடியுமா என்றோம்
திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையைச் சேர்ந்த மீனவர்தான் எங்கள் அப்பா அந்தோணிசாமி- அவரது மணைவியாகிய எங்கள் அம்மாவிற்கு தேன்மொழி,ரதி,ஐடா,டிசிலா,கோல்டு,பெக்சஸ்டஸ் என ஆறு பெண் குழந்தைகள்.
அம்மா ராணி பள்ளிப்படிப்பை முடிக்காதவர், கொஞ்சம் படித்திருந்தால் கடலை மட்டுமே நம்பி வாழும் கணவருக்கு ஏதோ ஓரு வகையில் உதவியிருக்கலாமே என எண்ணினார்.
சரி நடந்தது நடந்துவிட்டது நமக்கு பிறந்த பெண் குழந்தைகளையாவது எப்பாடுபட்டாவது நன்றாக படிக்கவைத்து அவர்கள் சொந்தக்காலில் நிற்கும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தரவேண்டும் என்று வைரக்கியம் கொண்டார்.இதற்காக அவர் பட்ட சிரமங்கள் நிறைய.
உறவினர்களும்,நண்பர்களும் பொம்பளப் பிள்ளைகள பீடி சுத்த அனுப்பினால் வருமானமாவது வருமே என்ற போது,‛ நான் கஷ்டப்பட்டாலும் பராவாயில்லை என் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது படிக்கவச்சு எல்லோரையும் டீச்சாராக்குவேன்' என்றார் அதன்படியே ஆக்கிவிட்டார். பெண்கள் நாங்கள்ஆறு பேரும் அம்மாவின் லட்சியம் அறிந்து அதற்கேற்ப படித்தோம், பள்ளிப்படிப்பை இடிந்த கரையிலும்,கல்லுாரி படிப்பை நாகர்கோவிலும் பின் ஆசிரியர் பயிற்சிப்படிப்பை அதற்கான இடங்களிலும் படித்து முடித்து எவ்வித சிபாரிசுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களாக இருக்கிறோம்.
எங்களை எல்லாம் சொந்தக் காலில் நிற்க வைத்தது மட்டுமின்றி நாடும் ஏடும் போற்றும்படியாக இப்போது உங்கள் முன் நல்லாசிரியராக, லட்சிய ஆசிரியராக கொண்டுவந்தும் நிறுத்தியுள்ளார்.
அப்பா இப்போது உயிருடன் இல்லை, அம்மாவிற்கு வயது 73 ஆகிவிட்டது இப்போதாவது ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம் என் பேரப்பிள்ளைகளின் கல்விக்கனவுகளை நிறைவேற்ற வேண்டாமா? என்று கேட்டு இப்போது அவர்களை தயார் செய்துவருகிறார் எங்கள் அம்மா.
ஐடா சொல்லி முடித்த போது லட்சிய தாயார் ராணி அம்மாவை அரங்கமே எழுந்து நின்று கைதட்டி பாராட்டி மகிழ்ந்தது.
எல்.முருகராஜ்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.