கால்நடை பராமரிப்பு உதவி பணியாளர்கள் நியமனம்... எப்போது? நேர்காணல் நடந்து ஐந்தாண்டுகளாகியும் தீர்வு இல்லை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 10, 2023

Comments:0

கால்நடை பராமரிப்பு உதவி பணியாளர்கள் நியமனம்... எப்போது? நேர்காணல் நடந்து ஐந்தாண்டுகளாகியும் தீர்வு இல்லை

கால்நடை பராமரிப்பு உதவி பணியாளர்கள் நியமனம்... எப்போது? நேர்காணல் நடந்து ஐந்தாண்டுகளாகியும் தீர்வு இல்லை

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கால்நடை துறையில் காலியாக உள்ள 52 கால்நடை உதவி பராமரிப்பு பணியாளர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளன. இதற்காக இருமுறை நேர்காணல் நடத்தியும், பணியாளர்கள் நியமனம் கிடப்பில் உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 4.76 லட்சம் கால்நடைகள் உள்ளன. இந்த கால்நடைகள் மூலம் அந்தந்த பகுதி கால்நடை விவசாயிகள் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

இந்த கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் பராமரித்து வந்தாலும், அதற்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 45 கால்நடை மருத்துவமனைகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன.

கால்நடை மருத்துவர்கள் பணியிடம் இதற்கு முன் காலியாக இருந்தன. கடந்த ஆண்டு தற்காலிக மருத்துவர்கள் இரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டனர்.

இருந்தாலும் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதற்கு சிகிச்சை அளிக்க கால்நடை உதவி பராமரிப்பாளர் ஒவ்வொரு மருத்துவமனையிலும் உள்ளனர். அவர்கள் வேலை, தினசரி மருத்துவமனையை சுத்தமாக பராமரித்தல், மருத்துவ உபகரணங்களை சுத்தம் செய்தல், காயம்பட்ட கால்நடைகளுக்கு மருந்து வைத்து கட்டுவது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

இப்பணிகளுக்கு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 52 இடம் காலியாக உள்ளதாக ஐந்தாண்டுகளுக்கு முன் அறிவித்தனர்.

இதையடுத்து 2017ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் கால்நடை உதவி பராமரிப்பாளர்களுக்கான நேர்காணல் தேர்வு நடந்தது.

இதில் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். மூன்று நாட்கள் தேர்வு நடைபெற்றது.

இப்பணிக்கு கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி, சைக்கிள் ஓட்ட வேண்டும், மாட்டை பிடித்து எப்படி கட்ட வேண்டும் என, தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலானவர்கள் இளநிலை பட்டம், முதுநிலை பட்டம் மற்றும் பி.இ., படித்தவர்கள் என அதிகமாக பங்கேற்றனர். அந்த நேர்காணல் முடிந்தும் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 2022 ஆண்டு ஏப்., மாதம் காஞ்சிபுரத்தில் மீண்டும் நேர்காணல் தேர்வு நடந்தது. இதில், 2017 ம் ஆண்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்காணலில் மீண்டும் கலந்து கொள்வதற்கான அழைப்பு அனுப்பப்பட்டது.

இதில் பலருக்கு அழைப்பு வரவில்லை என்றும், ஒரு சிலருக்கு காலதாமதமாக தகவல் கிடைத்ததால் நேர்காணலில் பங்கேற்க முடியவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் காலிப் பணியிடம் நிரப்பப்படாமல் இருக்கிறது.

இதுகுறித்து மாநில கால்நடை உதவி பராமரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், கடந்த மாதம் கால்நடை துறை இயக்குனரை சந்தித்து கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வைத்ததாக சங்கத் தலைவர் ஜெயமணி தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த மாவட்ட கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, 'நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்களை பணி நியமனம் செய்வது அரசுதான் முடிவு செய்ய வேண்டும். காலிபணியிடம் நிரப்பினால் நல்லது தான்' என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews