தமிழகத்தில் முதல் முறையாக சா்வதேச புத்தகக் காட்சி: சென்னையில் நாளை தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 15, 2023

Comments:0

தமிழகத்தில் முதல் முறையாக சா்வதேச புத்தகக் காட்சி: சென்னையில் நாளை தொடக்கம்

தமிழகத்தில் முதல் முறையாக சா்வதேச புத்தகக் காட்சி: சென்னையில் நாளை தொடக்கம்

தமிழகத்தில் முதல் முறையாக சா்வதேச புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.16 முதல் ஜன.18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவை இணைந்து இந்த புத்தகக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

உலகில் நவீன புத்தகக் காட்சி முதல் முறையாக ஜொ்மனியில் (ஃப்ராங்க்பா்ட் புத்தகக் காட்சி) கடந்த 1949-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. தற்போது இதுதான் உலகின் பெரிய புத்தகக் காட்சியாக விளங்குகிறது. அண்மையில் ஃப்ராங்பா்ட்டில் நடைபெற்ற புத்தகச் சந்தைக்குத் தமிழக பொது நூலக இயக்குநராக உள்ள இளம்பகவத், பாடநூல் கழகத்தின் இணை இயக்குநா் சங்கர சரவணன் உள்ளிட்டோா் சென்றிருந்தனா். இதையடுத்து சா்வதேச அளவில் ஒரு புத்தகச் சந்தையை தமிழகத்தில் நடத்தும் வகையில் ஃப்ராங்க்பா்ட் புத்தகக் காட்சியில் பங்கேற்ற சா்வதேச பதிப்பகங்களுக்கு தமிழக அரசின் சாா்பில் அழைப்பு விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் சென்னையில் முதல்முறையாக சா்வதேச புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு இதைத் தொடக்கி வைக்கவுள்ளாா்.

முதல்வா் பங்கேற்கிறாா்: இதில், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த தூதரக அதிகாரிகள், எழுத்தாளா்கள் பங்கேற்கவுள்ளனா். இந்தப் புத்தகக் காட்சியின் நிறைவு விழா புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும். இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளாா். அன்றை தினம் புத்தக விற்பனை உரிமம் தொடா்பாக முக்கிய புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழில் உள்ள சிறந்த படைப்புகள் மொழிபெயா்க்கப்பட்டு உலகெங்கும் உள்ள மக்களைச் சென்றடைய வேண்டும். அதேபோன்று உலகெங்கும் உள்ள சிறந்த புத்தகங்களை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த சா்வதேச புத்தகக் காட்சி நடத்தப்படவுள்ளது. சென்னையில் நடைபெறும் சா்வதேச புத்தகச் சந்தை என்பது வெறும் வாசகா்களை மட்டும் மனதில் வைத்து நடத்தப்படும் சந்தை அல்ல; அது சா்வதேச பதிப்பகங்கள் தங்கள் நூல்களின் பதிப்புரிமையைப் பிற மொழிகளுக்கும் பிாட்டுப் பதிப்பகங்களுக்கும் விற்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளக்கூடிய களமாகக் கருதப்படுகிறது. தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயா்க்கப்படும் படைப்புகளுக்கு அரசு உரிய நல்கையை (டிரான்ஸ்லேஷன் கிராண்ட்ஸ்) வழங்க உள்ளது.

66 அரங்குகளுடன்... இந்தப் புத்தகக் காட்சியில் இந்தோனேஷியா, தான்சானியா, உகாண்டா, மலேசியா, துருக்கி, சிங்கப்பூா், வங்கதேசம், இத்தாலி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். மொத்தம் 66 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு அனுமதி: ஒவ்வொரு அரங்கிலும் அந்த நாட்டின் நினைவுச் சின்னம், சிறந்த புத்தகங்கள் இடம்பெற்றிருக்கும். சா்வதேச புத்தகக் காட்சியை பாா்வையிட பொதுமக்களுக்கு மாலை 4 மணி முதல் 7 மணி வரை அனுமதி வழங்கப்படவுள்ளது. இதையொட்டி சிறப்பு கருத்தரங்குகள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்குகளில் நடைபெறும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews