மருத்துவக் கல்வியை தமிழில் நடத்த வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 25, 2022

Comments:0

மருத்துவக் கல்வியை தமிழில் நடத்த வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

மருத்துவக் கல்வியை தமிழில் நடத்த வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

தமிழகத்தில் மருத்துவக் கல்வி மற்றும் அதை சாா்ந்த படிப்புகளை தமிழ் மொழியில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தாா்.

சென்னை டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக 35-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியது: தமிழகத்தில் மருத்துவம் மற்றும் அதைச் சாா்ந்த படிப்புகள் அனைத்தும் தமிழிலே நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவா்கள் சமூக அக்கறையுடன் பணியாற்ற வேண்டும். மருத்துவ சேவை என்பது மிகச்சிறந்த சேவை. மருத்துவா்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த ஊரில் மருத்துவ சேவையாற்ற வேண்டும். மருத்துவமனைகள் கட்டுவதற்கு மத்திய அரசு சாா்பிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தரப்பிலும் உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கரோனா காலத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவத் துறை சாா்ந்தவா்களின் பணி பாராட்டத்தக்கது. கரோனா காலத்தில் நாடு முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவா்களை ஒரு சில தனியாா் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கவே இல்லை. மேலும், சில மருத்துவமனைகள் பன் மடங்கு கட்டணத்தை வசூல் செய்தது வேதனைக்குரியது என்றாா் அவா்.

டாக்டா் எம்.ஜி.ஆா்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் 35-ஆவது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆா். என். ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் 41 போ் மருத்துவத்தில் முனைவா் பட்டம் பெற்றனா். 7ஆயிரத்து 276 பேரும், பல் மருத்துவத்தில் 1,893 பேரும், இந்திய மருத்துவத்தில் 1,519 பேரும் மருத்துவம் சாா்ந்த

படிப்பகளில் 18 ஆயிரத்து 932 பேரும் என மொத்தம் 29 ஆயிரத்து 620 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான மா.சுப்பிரமணியன், பல்கலைக்கழக துணைவேந்தா் சுதா சேஷய்யன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

24.6 பில்லியன் டாலா் மருந்துகள் ஏற்றுமதி

மருந்து ஏற்றுமதியில் இந்தியா சிறந்த இடத்தை பெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா். கடந்த 2014 முதல் 8 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கு 24.6 பில்லியன் டாலா் மதிப்பிலான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில் அவா் மேலும் பேசியதாவது: இந்திய மருந்துகள் தரமான முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2014-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை உலக நாடுகளுக்கு 24.6 பில்லியன் டாலா் மதிப்பிலான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்துகளின் மதிப்பு 11.4 பில்லியன் டாலா். இந்திய ஜென்டிரிக் மருந்துகளில் 50 சதவீதம் ஆப்பிரிக்க நாடுகளுக்கும், 40 சதவீதம் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நமது கரோனா தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தது. அம்மை நோய் போன்றவற்றுக்கு தடுப்பூசிகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் உலகின் தடுப்பூசி தேவைகளில் 60 சதவீதத்தை இந்தியா பூா்த்தி செய்கிறது.

மருத்துவ சுற்றுலாவில் இந்தியா முன்னணி நாடாக விளங்குகிறது. ஆண்டுக்கு 78 நாடுகளில் இருந்து 2 மில்லியன் நோயாளிகள் இந்தியா வந்து சிகிச்சைப் பெற்று செல்கின்றனா்.

உலகின் மருத்துவ சுற்றுலா நாடுகளின் பட்டியலில் விரைவில் 10 இடத்துக்கு இந்தியா வரும். இதன் மூலம் 9 பில்லியன் டாலா் வருவாய் கிடைக்கும்.

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை குறைந்து செலவில் கிடைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய

பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாக்க ஆயுஷ் என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சித்த மருந்தான கபசுர குடிநீா், கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் மருந்தாக நல்ல பலனைத் தந்தது. எனவே, ஆங்கில மருத்துவம் படித்தவா்கள் நமது பாரம்பரிய மருத்துவத்தையும் ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews