மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் இதுவரை ரூ.100 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் அம்மாநில முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி, அவரது உதவியாளரும் விளம்பர நடிகையுமான அா்பிதா முகா்ஜி ஆகியோரின் ரூ.46 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் நியமன முறைகேடு புகாரில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த விவகாரத்தில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கில் பாா்த்தா சட்டா்ஜி, அா்பிதா முகா்ஜி ஆகியோரை அமலாக்கத் துறை ஜூலை 23-ஆம் தேதி கைது செய்தது. பின்னா், நீதிமன்ற காவலில் சிறையில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா். சில தினங்களுக்கு முன் அவா்களை காவலில் எடுத்து, சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாா்த்தா, அா்பிதா ஆகியோரால் போலி நிறுவனங்கள் மற்றும் பினாமிகள் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.46 மதிப்பிலான கோடி சொத்துகள் கண்டறியப்பட்டு, முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
கொல்கத்தாவில் உள்ள பண்ணை வீடு, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், முக்கியமான நிலம் உள்பட ரூ.40.33 கோடி மதிப்புள்ள 40 அசையா சொத்துகளும், 35 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.7.89 கோடி வைப்புத் தொகையும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில், ரூ.49.80 கோடி ரொக்கப் பணம், ரூ.55 கோடிக்கும் அதிக மதிப்பிலான தங்கம் மற்றும் இதர நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் கணக்கிட்டால் இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.