''பஸ் படியில் தொங்குவதை மாணவர்கள் 'ஸ்டைல்' ஆக கருதுகின்றனர். அவர்களை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், மதுரையில் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நேற்று நடந்தது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
தொடக்க கல்வி தரமாக இருக்கும் நாடு தான் வளர்ச்சியடையும்.
கொரோனாவால் உலகளவில் 33 வாரங்கள், இந்தியாவில் 75 வாரங்கள் பள்ளிகள் மூடப்பட்டதாக யுனெஸ்கோ கூறியுள்ளது
இதில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து, ஆசிரியர்கள் யோசிக்க வேண்டும்.
மாணவர்களின் மனரீதியான மாற்றங்களையும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் மூர்த்தி பேசுகையில், ''தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதற்கு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதும், ஆசிரியர்கள் திறமையுமே காரணம். கல்வித்துறையில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது,'' என்றார்.
நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:
'நீட்' தேர்வு விலக்கு விவகாரத்தில், கவர்னரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். நல்ல முடிவு எட்டப்படும் என, நம்புகிறோம். பள்ளிகளில் பாலியல் பிரச்னைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
யாராக இருந்தாலும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பஸ் படியில் தொங்குவதை, மாணவர்கள் ஸ்டைலாக கருதுகின்றனர்.
அவர்களை கீழே இறக்கி விட உத்தரவிடப்பட்டுள்ளது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதுடன் பெற்றோர் வேலை முடிவதில்லை; அவர்களை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.