தடுப்பூசி செலுத்திய மாணவிகளுக்கு உடல்நலப் பாதிப்பா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 24, 2022

1 Comments

தடுப்பூசி செலுத்திய மாணவிகளுக்கு உடல்நலப் பாதிப்பா?

தடுப்பூசி செலுத்திய மாணவிகளுக்கு உடல்நலப் பாதிப்பா? மா. சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திய மாணவிகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து சட்டப்பேரவையில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் இன்று சட்டப்பேரவையில் மருத்துவத் துறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மா.சுப்பிரமணியன் இன்று சட்டபேரவையில் ஆற்றிய உரையில், தடுப்பூசி இயக்கம் என்பது 2021, ஜனவரி 16 ஆம் தேதி, இந்தியா முழுவதிலும் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட அந்த நாளிலிருந்து 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் இந்தியா முழுமைக்கும் இதுவரை 180 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன.

தற்போது 12 வயது முதல் 14 வயதினருக்கான தடுப்பூசி கோர்பெவாக்ஸ் என்ற தடுப்பூசி கடந்த ஒரு வார காலமாக போடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 10 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரத்து 372 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. ராணிப்பேட்டை மாவட்டம், எத்திராஜ் அம்மாள் முதலியாண்டான் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 17 வயது, ஆர்.யோகலட்சுமி மற்றும் அதே பள்ளியில் படித்து வரும் 15 வயது, பி.பிரியதர்ஷினி என்பவர்கள் கடந்த 4.1.2022 மற்றும் 2.2.2022 அன்றைக்கு கோவாக்சின் தடுப்பூசியினை செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி அளிக்கப்பட்டவுடன் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் சில நாட்கள் கழித்து, ஆர்.யோகலட்சுமி என்கின்ற மாணவிக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகத் தெரிவித்தன்பேரில், உடனடியாக சோளிங்கர் மருத்துவமனையிலும், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையிலும், வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலும் உயர் சிகிச்சை தேவைப்பட்டதால் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையிலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

அதோடு பிரியதர்ஷினி என்கின்ற மாணவிக்கு உடல் பலவீனம் பிரச்சினை தெரிவித்ததன்பேரில் அவருக்கு உடனடியாக சிகிச்சை சோளிங்கர் மருத்துவமனை, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையிலும், அதேபோல் வேலூர் சிஎம்சி மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கூறிய இரண்டு மாணவிகள் மற்றும் அவர்கள் பெற்ற சிகிச்சைகள் குறித்து 12.03.2022 அன்று மாவட்ட மற்றும் மாநில அளவிலான தடுப்பூசிகளை செலுத்தியதற்குப் பிறகு வரும் பின்விளைவுகளைக் கண்காணிக்கும் குழு கூடி அனைத்து மருத்துவ ஆவணங்களையும் பரிசீலித்து, அதன்பிறகு அவர்கள் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். அப்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் யோகலட்சுமி-க்கு கோவிட் தடுப்பூசி செலுத்தியதற்குப் பிறகு ஏற்பட்ட பின்விளைவுகளுக்கும் தடுப்பூசி செலுத்தியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், பிரியதர்ஷினிக்கு உடல் பாதிப்பு, நோயாக இருக்கலாம் என்ற நிலையில், தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பா என அறிய, இவ்வறிக்கையினை மேல் பரிசீலனைக்காக இந்த தகவல்கள் தில்லியில் உள்ள தேசிய தடுப்பூசி செலுத்தியதன் பின்விளைவுகளைக் கண்காணிக்கும் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

எனவே, பாதிக்கப்பட்ட இருவருக்கும் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தொடர்ந்து உயர் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதல்வர் கவனத்திற்கு இது சென்றவுடன், அவர் உடனடியாக ‘நீங்களும், கதர்த் துறை அமைச்சரும் அடுத்த வாரமே, அந்த இரு குழந்தைகளின் வீட்டிற்குச் சென்று நிலைமையைப் பரிசீலித்து வாருங்கள்’ என்று ஆணையிட்டிருக்கிறார்கள் என்று சட்டமன்ற பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 comment:

  1. என்றைக்கு தவறியவர்கள் தவறை ஒப்புக்கொண்டனர்?

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews