2,009 அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்-மறுகட்டமைப்பு, வளர்ச்சி குறித்து ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 21, 2022

Comments:0

2,009 அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்-மறுகட்டமைப்பு, வளர்ச்சி குறித்து ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டத்தில், 2,009 அரசு பள்ளிகளில் நேற்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது. அதில், பெற்றோர்கள் கலந்துகொண்டு பள்ளி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினர்.அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009ன் படியும் ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது. அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு, பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை வழங்குவது அதன் முக்கிய பணியாகும்.

அதோடு, ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்கான கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,009 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடந்தது. அதில், பள்ளிதலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பள்ளியின் வளர்ச்சிக்கான திட்டங்கள், இல்லம் தேடி கல்வி, மாணவர்களின் கல்வி திறன் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோர், பள்ளி ேமலாண்மைக் குழு கூட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டிவிஎம் நேரு தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது. இப்பள்ளியில் சுமார் 3 ஆயிரம் மாணவிகள் படிப்பதால், தேவையான கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறை வசதிகள் அதிகரித்தல், பள்ளி வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ளுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையும் படிக்க | கல்விக் கடன் ரத்து அறிவிப்பு எப்போது ?

அதேபோல், மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சசிகலைகுமாரி முன்னிலையில் நடந்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் விஸ்வநாதன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரவி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது, இந்தியன் வங்கி சார்பில் மேலாளர் ராகுல், பள்ளிக்கு ₹12 ஆயிரம் மதிப்பிலான கணினி பிரின்டர் வழங்கினார். பெரணமல்லூர்: பெரணமல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை கூட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து கோணாமங்கலம், நமத்தோடு, அன்மருதை, ஆவணியாபுரம் மேல்சாத்தமங்கலம், கோட்டுபாக்கம், நெடுங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினர். இதில் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செங்கம்: செங்கம் அடுத்த நீப்பத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ‘நம் பள்ளி நம் பெருமை’ பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடந்தது‌. ஊராட்சி தலைவர் சென்னம்மாள் காசி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அய்யனார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தலைமையாசிரியர் சிவராமன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதையும் படிக்க | புதிய ஓய்வூதியத் திட்டம் அவசியமா? ஆண்டுக்கு அரசுக்கு ரூ.3,000 கோடி கூடுதல் செலவு

திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் சுமார் 2.50 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அதில், 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றதாக, கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.போளூர்: போளூர் ஒன்றியம் குருவிமலை ஊராட்சி நடுநிலை பள்ளியில் நடந்த மேலாண்மை குழு கூட்டத்திற்கு தலைமையாசிரியர் வே.ஆஞ்சலா தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியைகள் மா.பிரிசில்லா, சு.மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆசிரியைகள் அ.மலர்விழி, சி.திரேசா பேசினர். பட்டதாரி ஆசிரியர் எஸ்.டேவிட்ராசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews