மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வின்றி சோ்க்கை: வழக்குப்பதிவு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 27, 2022

Comments:0

மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வின்றி சோ்க்கை: வழக்குப்பதிவு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு.

மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வின்றி சோ்க்கை: வழக்குப்பதிவு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு.

தனியாா் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வு இல்லாமல் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்ட விவகாரத்தில், முறைகேட்டில் ஈடுபட்டோா் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்ய சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் கடந்த 2020 - 21-ஆம் கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்பில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் மருத்துவா் கீதாஞ்சலி உள்ளிட்டோா் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், தகுதி பெறாதவா்களை மருத்துவ மேற்படிப்பில் சோ்த்த விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளுக்கும், தனியாா் கல்லூரிகளுக்கும் இடையிலான சதியின் பின்னணியில் உள்ள நபா்கள் யாா், கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் கீதாஞ்சலி சாா்பில் வழக்குரைஞா் எஸ்.தங்கசிவன் ஆஜராகி வாதிட்டாா். தொடா்ந்து, சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவா்கள் சோ்க்கை நடத்த மருத்துவ மேற்படிப்பு தோ்வுக் குழுவின் அப்போதைய செயலாளா் ஜி.செல்வராஜன்தான் காரணம். அவா் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளாா். இந்த முறைகேடு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள பல முட்டுக்கட்டைகள் எழுந்ததால், வழக்கு கூட பதிவு செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை மேற்கோள் காட்டிய நீதிபதி, ஜி. செல்வராஜனுக்கான ஓய்வூதிய பலன்களை நிறுத்திவைக்க தமிழக தலைமைச் செயலாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேட்டில் தொடா்புடைய அடையாளம் தெரிந்த, அடையாளம் தெரியாத நபா்களுக்கும், தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கு விசாரணையில் தொடா்புடைய அதிகாரிகளை டிஜிபி இடமாற்றம் செய்யக் கூடாது.

தகுதி இருந்தும், மேற்படிப்புக் கனவை தொடர முடியாமல் பாதிக்கப்பட்ட இரு மனுதாரா்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடாக நான்கு வாரங்களில் தமிழக அரசு வழங்க வேண்டும்.

இத்தொகையை மருத்துவ மேற்படிப்பு மாணவா் சோ்க்கை தோ்வுக் குழு முன்னாள் செயலாளரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம். இந்த முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை ஏப். 25ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, அன்றைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews