15 மாநில பள்ளி மாணவர்களின் மதிய உணவு திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 30, 2021

Comments:0

15 மாநில பள்ளி மாணவர்களின் மதிய உணவு திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க உத்தரவு

புதுடெல்லி: தமிழகம் உட்பட 15 மாநில பள்ளி மாணவர்களின் மதிய உணவு திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி, மதிய உணவில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரிசி ஆகியவற்றை வரும் 2024ம் ஆண்டிற்குள் செறிவூட்டப்பட்ட அரிசியாக விநியோகிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியில் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு பெரிய தடையாக இருப்பதால், பல்வேறு திட்டங்களின் கீழ் விநியோகிக்கப்படும் அரிசியை செறிவூட்டி வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழிகாட்டுதலின்படி, ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு (28 மில்லி கிராம்-42.5 மில்லி கிராம்), ஃபோலிக் அமிலம் (75-125 மைக்ரோ கிராம்), வைட்டமின் பி-12 (0.75-1.25 மைக்ரோ கிராம்) இருக்கும்.

கூடுதலாக, அரிசி நுண்ணிய ஊட்டச்சத்துக்களுடன், தனித்தனியாக அல்லது கலவையில், துத்தநாகம் (10 மில்லி கிராம் 15மில்லி கிராம்), வைட்டமின் A (500-750 மைக்ரோ கிராம் ஆர்.இ), வைட்டமின் பி1 (1மில்லி கிராம் -1.5 மில்லி கிராம்), வைட்டமின் பி2 (1.25 மில்லி கிராம்-1.75 மில்லி கிராம்), வைட்டமின் பி3 (12.5 மில்லி கிராம்-20 மில்லி கிராம்) மற்றும் வைட்டமின் பி6 ஒரு கிலோவிற்கு (1.5 மில்லி கிராம் -2.5 மில்லி கிராம் ) இருக்க வேண்டும். இந்த திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், உத்தரப் பிரதேசம், அசாம், தெலங்கானா, பஞ்சாப், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய 15 மாநிலங்களில் 15 மாவட்டங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி முதல் இந்த திட்டத்தின்கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சகம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஆகியன கடந்த 20ம் தேதி மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்திய உணவுக் கழக கிடங்குகளில் இருந்து செறிவூட்டப்பட்ட அரிசிகளை மதிய உணவு திட்டத்திற்குக்கு சப்ளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசியின் இருப்பை அதிகரிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். போதுமான இருப்பை உறுதி செய்தபின்னர், இத்திட்டத்தை அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தலாம்’ என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews