உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களின் நிலை - அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 19, 2021

Comments:0

உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களின் நிலை - அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களின் நிலை - அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் இணையதள வசதியுடன் கல்வி கற்கும் வகையில் 6,029 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ‘உயர் தொழில்நுட்ப ஆய்வகம்’ (ஹைடெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறைந்த இணைய வேகம், தொழில்நுட்பக்கோளாறு உட்பட காரணங்களால் பல பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் செயல்படாமல் இருப்பதாக கல்வித் துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் நிலையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அப்போது ஆய்வகங்களின் செயல்பாடுகள் குறித்து தலைமையாசிரியர்களிடம் கேட்டறிய வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் இருப்பது தெரியவந்தால் அதன் விவரங்களை மாவட்ட பொறியாளர்களை தொடர்பு கொண்டு உடனே தெரிவிக்க வேண்டும்.

இதுதவிர உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் எந்தவித பழுதுகளும் இல்லாமல் முழுமையாக செயல்பட தேவையான அறிவுறுத்தல்களை மாநில கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பெறலாம். பள்ளிகள் திறக்கப்பட்டால் அனைத்து ஆய்வகங்களும் செயல்படும் வகையில் அவற்றை தயார்படுத்த தலைமையாசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews