அரசுப் பள்ளிதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 22, 2020

Comments:0

அரசுப் பள்ளிதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தும்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசுப் பள்ளியால் என்ன சாதிக்க முடியும் என்ற கேள்விக்கு நாகேந்திரனை (வயது 24) விடச் சிறந்த உதாரணத்தைக் காட்டுவது கடினம். அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை மேலும் மேலும் துலக்கமாக்கிக் காட்டுவதுதான் நாகேந்திரனின், அதாவது டாக்டர் நாகேந்திரனின் கதை.a37மதுரையில் மர வியாபாரம் செய்துகொண்டிருந்தவர் கண்ணன். எதிர்பாராத விதமாகத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் சுமைகளைச் சமாளிக்க முடியாமல் காரைக்குடிக்கு இடம்பெயர்ந்தார். அப்போது அவரது மகன் நாகேந்திரன் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன். அடுத்த வேளை சாப்பாடுகூட நிச்சயமற்ற சூழலில் இருந்த இந்தக் குடும்பத்துக்கு உறவுகள் கைகொடுத்துப் பட்டினி இல்லாமல் பார்த்துக்கொண்டன.காரைக்குடியில் உள்ள பிரபல மளிகைக் கடை ஒன்றில் மளிகைச் சிட்டை எழுதும் வேலை கண்ணனுக்கு. அவரது மனைவி லதாவுக்கு அந்தக் கடையிலேயே கணக்கு எழுதும் வேலை. இருவரது மாதச் சம்பளத்தைக் கூட்டினாலும் மூவாயிரம்கூட இருக்காது. ஆனாலும், சராசரி பெற்றோரைப் போல இவர்களும் தங்கள் மகன் நாகேந்திரனை ஆங்கில வழியில் படிக்க வைக்க பிரயாசைப்பட்டு, தனியார் பள்ளியில் சேர்த்தார்கள். பொருளாதாரச் சூழல், ஐந்தாம் வகுப்புக்கு மேல் நாகேந்திரனை அங்கே அனுமதிக்கவில்லை. ஆறாம் வகுப்புக்கு, அரசு உதவி பெறும் எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். பருத்திப் பால் விற்றபின் பள்ளிக்கூடம் பிறகு நடந்தவற்றை நாகேந்திரனின் அம்மா லதா விவரிக்கிறார். “அந்த வயசுலயே குடும்பச் சூழலை நாகேந்திரன் நல்லா புரிஞ்சுக்கிட்டான். பாதி நாள் பள்ளிக் கூடத்துல சத்துணவு சாப்பிடப் பழகிக்கிட்டான். எங்க அண்ணன் எங்களுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காங்க. இவனையும் பொம்பளப் பிள்ளையையும் (நாகேந்திரனின் தங்கை) படிக்க வைக்கக் கூடுதலா கொஞ்சம் பணம் தேவைப்பட்டுச்சு. அதுக்காக பால் பாக்கெட் வாங்கி வீடு வீடா போட்டோம். தினமும் காலையில பருத்திப் பால் காய்ச்சி கேன்ல ஊத்திக் குடுப்பேன். அதை நாகேந்திரன்தான் ரெண்டு மூணு தெருவுக்குப் போயி வித்துட்டு வந்து பள்ளிக்கூடத்துக்குப் போவான். அதேமாதிரி, சாயந்திரம் வந்ததும் பக்கோடா போட்டுக் கொடுப்பேன். அதையும் வித்துட்டு வந்துதான் படிக்க உக்காருவான்.” “இவன் நல்லா படிக்கிறான்னதும் பள்ளிக்கூட ஆசிரியர்கள்லாம் அவனை நல்லாவே ஊக்கப்படுத்துனாங்க. எங்களால முடியாதப்ப இவனுக்கு அப்பப்ப பண உதவியும் செஞ்சுருக்காங்க. பத்தாம் வகுப்புல 461 மார்க் எடுத்தான். பன்னிரண்டாம் வகுப்புல 1,151 மார்க் எடுத்துப் பள்ளியின் முதல் மாணவனா தேர்வானான். அப்பெல்லாம் இவன டாக்டருக்குப் படிக்க வைக்கணும்கிற எண்ணம் எங்களுக்கு இல்ல. புள்ள நாலு வருசம் இன்ஜினீயரிங் படிச்சுட்டு ஏதாச்சும் ஒரு வேலையில உக்காந்தான்னா, அவன் தலையில குடும்ப பாரத்த எறக்கி வெசுட்டு நாம அக்கடான்னு இருக்கலாம்னுதான் நினைச்சிருந்தோம். ஆனா, நல்ல மார்க் எடுத்ததால மெடிக்கல் காலேஜ்ல சேர்க்க வேண்டியதாப் போச்சு’’ என்று பெருமிதம் பொங்கச் சொன்னார் லதா. தொடரும் வெற்றிப் பயணம் 2009-ல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நாகேந்திரனுக்கு இடம் கிடைத்தது. ஆனாலும், அரசு நிர்ணயித்த சொற்பமான கட்டணத்தைக்கூட செலுத்த முடியாத கஷ்டத்தில் இருந்தார் கண்ணன். விஷயத்தைக் கேள்விப்பட்ட நாகேந்திரனின் ஆசிரியர்கள், தங்களுக்குள் நிதி திரட்டி மொத்தமாய்ப் பதினைந்தாயிரம் ரூபாயை நாகேந்திரனிடம் கொடுத்தார்கள். அதேசமயம், நாகேந்திரனின் நிலைமையை அறிந்த தேனி ரேணுகா மில்ஸ் நிறுவனம் உதவிக்கரம் நீட்டியது. மருத்துவக் கல்வியை முடிக்கும் வரை அவருக்கான விடுதி மற்றும் சாப்பாட்டுச் செலவுகள், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை ரேணுகா மில்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இத்தனை பேரின் உதவிக்கரங்களைப் பற்றிக்கொண்டு மருத்துவக் கல்லூரிக்குள் கால் பதித்த நாகேந்திரன், முதல் ஆண்டிலேயே ஒரு பாடத்தில் தங்கப் பதக்கம் வாங்கினார். 80% மதிப்பெண்ணுடன் இந்த ஆண்டு தனது மருத்துவக் கல்வியை முடித்திருக்கும் நாகேந்திரன், இறுதி ஆண்டிலும் இரண்டு தங்கப் பதக்கங்களைத் தட்டிக்கொண்டு வந்திருக்கிறார். குடும்ப நிலையைப் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள்! தற்போது பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நாகேந்திரன், “எனக்குக் கிடைத்த ஆசிரியர்களும் பெற்றோரும் கோயில் கட்டிக் கும்பிடப்பட வேண்டியவர்கள். அதிலும், குறிப்பாக சுந்தர்ராமன் சாரையும் ஹென்றி பாஸ்கர் சாரையும் சொல்லியே ஆக வேண்டும். எனது ஆசான்களைப் போலவே ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் நல்ல ஆசான்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். லட்சங்களைக் கொட்டிக் கொடுத்துப் படித்தால்தான் லட்சியத்தை அடைய முடியும் என்பது போலியான மாயை. எனது குடும்பத்தின் கஷ்ட நிலைமை எனக்குக் கண்கூடாகத் தெரிந்தது. அதுதான், எப்பாடு பட்டாலும் முன்னுக்கு வர வேண்டும் என்கிற உந்துதலை எனக்குள்ளே வளர்த்தது. எனவே, குடும்பத்தின் நிலைமையைப் பிள்ளைகளுக்குப் புரியவைத்தால் தானாகப் படித்து முன்னுக்கு வந்துவிடுவார்கள்’’ என்று சொன்னவர், “விரைவில் மருத்துவப் பணியைத் தொடங்கப்போகும் நான் என் வாழ்நாளில் எந்த ஆசிரியர் வந்தாலும் கட்டணமின்றி வைத்தியம் பார்ப்பது என்ற தீர்மானத்தை எனக்குள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்’’ என்றும் சொன்னார். கைதூக்கி விட நாங்கள் தயார் நாகேந்திரனின் அப்பா கண்ணனிடம், “உங்கள் மகனைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று கேட்டதுதான் தாமதம். பொலபொலவெனக் கண்ணீரைக் கொட்டினார். “எங்களுக்குக் கடவுள் கொடுத்த வரம்தான் அவன்’’ என்று சொன்னவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நாகேந்திரன்குறித்துப் பேசும்போது, “பத்தாம் வகுப்பிலேயே ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர முடியலைன்னு அழுதவன், பன்னிரண்டாம் வகுப்பில் அதைச் சாதிச்சுட்டான். இந்த வெறி எல்லா பிள்ளைகளுக்கும் இருக்கணும். அப்பதான் முன்னுக்கு வர முடியும். நாகேந்திரனால் எங்கள் பள்ளிக்குப் பெருமை. இவனைப் போலவே இன்னும் நான்கைந்து பசங்களுக்கு மேல்படிப்புக்கு நாங்க உதவி செஞ்சிருக்கோம். ஆர்வமுள்ள பசங்க எத்தனை பேர் வந்தாலும் கைதூக்கி விட நாங்க தயாரா இருக்கோம்’’ என்று சொன்னார்கள். அண்ணன் காட்டிய வழியில் நாகேந்திரனின் தங்கை சொர்ணமுகியும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்துத் தேர்ச்சி பெற்று, இப்போது மதுரை தியாகராஜா கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் படித்துக்கொண்டிருக்கிறார். தனியார் பள்ளிகளில் ஒருபோதும் நிகழாது இந்த அதிசயம். ஏனெனில், பணம்தான் அவற்றைப் பின்னின்று இயக்கும் சக்தி. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை சமூக நீதிதான் அவற்றைச் செலுத்தும் சக்தி. அரசாலும் மக்களாலும் கைவிடப்பட்டுக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகள்தான் கடந்த காலத்தில் எண்ணற்ற நாகேந்திரன்களை உருவாக்கியிருக்கின்றன. நாகேந்திரன்கள் இனி உருவாவதும் அரசுப் பள்ளிகளின் கையில்தான் இருக்கிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews