Search This Blog
Sunday, October 06, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க ஆங்கில வழிக்கல்வி, அழகான சீருடை, பாடத்திட்டம் மாற்றம் என அரசு எடுத்த முயற்சிகள் விழலுக்கு இரைத்த நீராக வீணான நிலையில், வேறுவழியின்றி ஒற்றை இலக்க மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை இழுத்து மூடும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இத்தகைய சூழலில், தான் பணியாற்றும் பள்ளியை மூடும் நிலையில் இருந்து காப்பாற்றியுள்ளார் தலைமை ஆசிரியர் ஒருவர். அதிக மாணவர் எண்ணிக்கையுடன், தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஈடாக டிஜிட்டல் வகுப்பறை, அழகான சீருடைகள், ஷூக்கள் என பல நடவடிக்கைகளை எடுத்து ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் மாணவர் எண்ணிக்கையையும் உயர்த்தி, அந்த மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு ஈடாக தனித்திறன் போட்டிகள், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வைத்து விருதுகளை குவிக்க வைத்து சாதித்து காட்டியிருக்கிறார் அவர்.
அந்த பள்ளி வேலூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் குரும்பேரி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி.கந்திலி ஒன்றியத்தில் பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 2 முதல் 8 வரையே உள்ளது. இப்பள்ளிகளை மூடக்கூடாது என்பதற்காக கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மக்களிடையே, குழந்தைகளை அரசுப்பள்ளியில் தரமான கல்விக்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம் என்று ஒரு பக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கந்திலி ஒன்றியம் குரும்பேரி கிராம ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில், கடந்த 2000ம் ஆண்டு வெறும் 80 பேர் மட்டுமே படித்து வந்தனர். அதன்பின், 2009ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த வீரபத்திரன் என்பவர் தலைமையாசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தலைமையாசிரியராக பொறுப்பேற்ற உடன் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த முயற்சி மேற்கொண்டார். இப்பள்ளியில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்ட உடன் மாணவர் எண்ணிக்கை 100 பேர் என உயர்ந்தது. இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்கான முயற்சியில் தலைமையாசிரியர் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் குரும்பேரி கிராமத்தின் அருகில் உள்ள ஜவ்வாது மலையடிவார சிறுகிராமங்களுக்கு தினமும் சென்று மாணவர் சேர்க்கை நடவடிக்கையை மேற்கொண்டார். அவரது இந்த முயற்சியில் அவர் இறங்கிய போது, இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளை எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்க நகர்புறங்களுக்கு அனுப்பி வைக்க முடியாமல் தவித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தலைமையாசிரியர் வீரபத்திரன். தொற்று மேடு, அண்ணா நகர், சிம்மனபுதூர், கோடியூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சிறு கிராமங்களில் வீடு, வீடாக சென்று, அங்குள்ள மக்களிடம், அவர்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாததன் காரணத்தை கேட்டறிந்தார்.
இதையடுத்து தலைமையாசிரியர் வீரபத்திரன், தனது சொந்த பணம் ரூ.10 லட்சத்தில் பள்ளிக்கு என சொந்த வாகனத்தை வாங்கினார். அதற்கான ஓட்டுனர், நடத்துனர் என 2 பேரை நியமித்து பள்ளிக்குழந்தைகளை பள்ளிக்கு வரவழைப்பதற்கான முயற்சியில் இறங்கினார். இவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. குரும்பேரியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்தனர். இதற்காக இக்குழந்தைகள் வேன் மூலம் தினமும் காலையில் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு, மாலையில் அவரவர் ஊர்களுக்கு அழைத்து சென்று விடப்பட்டனர். தற்போது இப்பள்ளியின் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 233 பேராக உயர்ந்துள்ளது. அதோடு தலைமையாசிரியர் மற்றும் இப்பள்ளியின் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வை பார்த்த இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளி வாகனத்துக்கான டீசல், டிரைவர், நடத்துனருக்கான சம்பளம் ஆகியவற்றை ஏற்று வழங்கி வருகின்றனர்.
இதுதவிர எல்கேஜி மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் ப்ரொஜெக்டர் மூலம் ரூ.2 லட்சம் செலவு செய்து மாணவர்களுக்கு யூ டியூப் மற்றும் செயல்வழிக்கற்றல், கணினி மூலமாக படத்துடன் விவரமாக விளக்கும் வகையிலான கல்வியையும் வழங்கி வருகின்றனர். மேலும் இப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனி பள்ளி சீருடைகளையும் தலைமையாசிரியர் சொந்த செலவில் வழங்கியுள்ளார். அதேபோல் விளையாட்டு, மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்தியதால் இப்பள்ளி மாணவர்கள் பல விருதுகளையும், பதக்கங்களையும் குவித்து வருகின்றனர். தலைமையாசிரியரின் இந்த முயற்சிக்கு பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கி இப்பள்ளியின் தரத்தை மேம்படுத்துவதில் பங்காற்றி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பள்ளி மாணவ, மாணவிகளிடம் கேட்டபோது, ‘தனியார் இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் படிக்கும் வசதிப்படைத்தவர்களின் பிள்ளைகளை பார்த்து ஏக்கமாக இருக்கும். அவர்களை போன்றே சீருடையுடன், ஷூ, சாக்ஸ், பெல்ட், டை அணிந்து செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்படும். அந்த ஆசையை எங்கள் தலைமையாசிரியர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். எங்களுக்கு அரசு பள்ளியில் படிக்கும் உணர்வே இல்லாமல் தனியார் பள்ளியில் படிக்கும் உணர்வே உள்ளது. மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதல் பரிசை தட்டி வந்துள்ளோம். இந்தியன் டேலண்ட் எக்ஸாம் என்ற மும்பையை தலைமையிடமாக கொண்டு மாணவர்களின் தனித்திறன் ஆய்வு வகுப்பு எடுக்கப்பட்டு நடந்த தேர்விலும் நாங்கள் தங்கம் வென்றுள்ளோம். இதேபோல தங்கம் வெள்ளி போன்ற பல்வேறு விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளோம்.
எங்களுக்கு ஒவ்வொரு நாளும் வகுப்புகள் தொடங்கும்போதும் விஞ்ஞானி அப்துல்கலாம், நேரு, சர்.சி.வி.ராமன் போன்ற விஞ்ஞானிகள், தலைவர்களை நினைவுகூர்ந்து எங்களை படிக்க வைக்க சொல்வார்கள். அரசுப்பள்ளியில் படித்து சந்திராயன் செயற்கைக்கோளை விண்ணில் ஏற்றி சாதனை படைத்த சிவன் போல் இஸ்ரோ விஞ்ஞானியாகவோ, பிற துறை விஞ்ஞானிகளாகவோ ஆக வேண்டும்’ என்றனர்.பள்ளியின் தலைமையாசிரியரிடம் கேட்டபோது, ‘தற்போது மாணவர்களின் பெரிய சொத்து கல்விதான். அதனால்தான் கிராமப்புற மக்களுக்கு மற்றும் மலை கிராம மக்களுக்கு கல்வியை புகட்ட வேண்டும் என்ற ஒரு காரணத்தினால் நான் தற்போது இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன். எனது முயற்சியின் காரணமாக இந்த கிராமத்தை சுற்றி 10 கிலோ மீட்டர் தூரத்தில் எந்த ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியும் கிடையாது. இங்கிருந்த ஒரு தனியார் பள்ளியும் மூடப்பட்டது. அங்கிருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு சேர்ந்துள்ளனர். அதற்கேற்ப மாணவர்களும் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விருதுகளை, பதக்கங்களை குவித்துள்ளனர்’ என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
HeadMaster
SCHOOLS
மூடுவிழா நிலையை எட்டிப்பிடிக்கும் நிலையில் விருதுகளை குவித்து ஆச்சரியக்குறியாய் மாறிய அரசுப்பள்ளி
மூடுவிழா நிலையை எட்டிப்பிடிக்கும் நிலையில் விருதுகளை குவித்து ஆச்சரியக்குறியாய் மாறிய அரசுப்பள்ளி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.