கல்வி, மருத்துவம் முழுவதும் அரசின் வசம் கொண்டுவரப்பட வேண்டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 21, 2018

Comments:0

கல்வி, மருத்துவம் முழுவதும் அரசின் வசம் கொண்டுவரப்பட வேண்டும்


பள்ளிக் கல்வி, மருத்துவம் இரண்டும் முழுமையாக அரசின் வசம் கொண்டுவரப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் வலியுறுத்தினார். சமகல்வி இயக்கத்தின் நம்ம ஊர், நம்ம பள்ளி: அரசு பள்ளிகளைப் பாதுகாப்போம்' என்ற மாநிலம் தழுவிய பரப்புரை குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நீதிபதி அரி பரந்தாமன் கூறியது: பெரும்பாலான வெளிநாடுகளில் பள்ளிக் கல்வி என்பது முழுவதும் அரசு சார்பில்தான் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் 1990 -ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அரசு பள்ளிகள்தான் முதன்மை பெற்றிருந்தன. உயர் பதவியில் இருப்பவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்தான் சேர்த்து வந்தனர். ஆனால், அதன் பிறகு தனியார்மயம், தாராளமயமாக்கம் என்ற அடிப்படையில், பள்ளிக் கல்வியில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டு வியாபாரமாக்கப்பட்டு விட்டது. இதே நிலை நீடித்தால், ஏழை மக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் கல்வி என்பதே கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும். தாய்மொழி வழிக் கல்வி கிடைக்க வேண்டும் என்றால் அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு பள்ளிகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும். இதேபோல் மருத்துவச் சேவையும் முழுமையாக அரசின் வசம் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் சமமான, தரமான மருத்துவ சேவை கிடைக்கும். எனவே, சமகல்வி இயக்கம் உள்பட அனைத்து இயக்கங்களும் இதற்காகப் போராட முன்வரவேண்டும் என்றார் அவர். சமகல்வி இயக்கத் தலைவர் மொ.ஜெயம்: அரசுப் பள்ளிகளை மூடுவதையும், மற்ற பள்ளிகளுடன் இணைப்பதையும் அரசு கைவிடவேண்டும். தமிழகம் முழுவதும் பொதுப் பள்ளி முறையை கொண்டுவர வேண்டும். 3 முதல் 18 வயது வரையுடைய குழந்தைகளுக்கு கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். மாநிலங்களின் வளர்ச்சிக்கேற்ப கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பவைதான் சமகல்வி இயக்கத்தின் முக்கிய கோரிக்கைகள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் பரப்புரை இயக்கங்களும், போராட்டங்களும் நடத்தப்படும் என்றார் அவர்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews