வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு, திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2018-19 ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.
ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை வருவாய்த்துறையிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை, தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.5, சேவைக் கட்டணம் ரூ.5 என மொத்தம் ரூ.10த்துடன், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஜூலை 25ஆம் தேதி வரை வழங்கலாம். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 மாணவர்களுக்கு (தலா 50 மாணவர்கள் மற்றும் மாணவிகள்) 9 முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.1000 வீதம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.