TNPSC - ‘ஆன்லைன்’ தேர்வு அடுத்த நிலைக்கு உயர்கிறது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 20, 2018

Comments:0

TNPSC - ‘ஆன்லைன்’ தேர்வு அடுத்த நிலைக்கு உயர்கிறது!


ஜூலை 4-ஆம் தேதி, ‘ஆன்லைன்’ தேர்வுகளை நடத்துவதற்கான ஒப்பந்தங் களை வரவேற்று, 48 பக்க அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது தேர்வாணையம். (விளம்பர எண் 500/2018) இதன்மூலம், கணினி வழித் தேர்வு முறைக்கு மாறுகிற திட்டம், உறுதி ஆகிறது.“ஆணையம் நடத்துகிற பல்வேறு நிலை, பணியாளர் தேர்வுக்கான, ‘கொள்குறி வகை கணினி வழித் தேர்வு’ (Objective Type Computer Based Examination) நடத்திக் கொடுக்க, அனுபவமிக்க நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்கள் (‘டெண்டர்கள்’) வரவேற்கப்படுவதாய், இந்த விளம்பரம் கூறுகிறது. ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) முழு விவரங்களும் தரப்பட்டு இருக்கின்றன. உண்மையில், இந்த அறிவிக்கை (விளம்பரம்) மிக நன்றாக வரையப்பட்டு இருக்கிறது.

‘‘நேர்மையான, பாதுகாப்பான, வெளிப் படையான, தற்போதினும் மேன்மையான ‘தேர்வு வழங்கு நுட்பம்’ (Test Delivery Mechanism) மூலம், ‘தேர்வுக் காலம்’ குறைக்கப்பட்டு, தேர்வு முடிவுகளை இயன்றவரை குறுகிய கால அவகாசத்தில் வெளியிடுதல்’’ என்று, ‘ஆன்லைன்’ தேர்வுக்கான நோக்கம், பத்தி 4(1)இல், தெளிவாக்கப்பட்டுள்ளது.ஓரிடத்தில் உள்ள கணக்கற்ற கணினிகளை ஒரே கட்டுப்பாட்டுச் சாதனம் (server) மூலம் இணைக்கிற, Local Area Network (LAN) ‘உள்ளூர் பகுதி கணினிச்சேவை’ மூலம், இத்தேர்வு நடைபெறும்.(பத்தி 2.II) தேர்வு தொடங்குவதற்கு முன்பாக, 10 நிமிடங்களுக்கு, தேர்வு குறித்த பயிற்சி(orientation) வழங்கப்படும்.மனிதக் குறுக்கீடு ஏதும் இன்றி, தேர்வருக்கு ஒதுக்கப்படுகிற கணினியில், ‘ரேண்டம்’ வினாக்கள் தோன்றும். அடுத்த வினாவுக்குத் தேர்வர் ‘கிளிக்’ செய்தால், ஒரு நொடிக்குள்ளாக, அடுத்த கேள்வி, திரையில்வந்துவிடும். ஒரு தேர்வர், ஒவ்வொரு வினாவுக்கும் தரப்பட்டுள்ள நான்கு தெரிவுகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ‘கிளிக்’ செய்வார். தேர்வரின் எல்லா ‘க்ளிக்’குகளும், நேரக் கணக்குக்காக, பதிவு செய்யப்படும்.தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்துக்குள் எல்லா விடைகளும் மத்திய ‘செர்வருக்கு’ மாற்றம் செய்யப்பட்டுவிடும். பாதுகாப்பு கருதி இந்த விடைகள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அங்கே சேமித்து வைக்கப்படும். உள்ளூர் மையத்தில் எந்தத் தேர்வரின் எந்தப்பதிவும் இருந்ததற்கான அடையாளம் கூட இருக்காது.தேர்வு முடிந்த 24 மணி நேரத்தில் தேர்வு தொடர்பான அத்தனை நடைமுறைகளையும் முடித்துவிட்டு, அதற்கான சான்றிதழும் ஆணையத்துக்கு, ஒப்பந்த நிறுவனம் அனுப்பிவிடவேண்டும். தேர்வு முடித்த கையோடு, ‘கருத்துப் படிவம்’ (feedback form) ஒன்றும் தேர்வர்களுக்கு வழங்கப்படும். இதுவும் அப்போதே அவ்வாறே பதிவு செய்யப்படும். இதற்குப் பிறகு, தேர்வர்களுக்கு கேள்வி கேட்கிற உரிமையை நல்கும் ‘challenge window’, ஏழு நாட்களுக்குத் திறந்தே இருக்கும். தேர்வு தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை இங்கே பதிவு செய்யலாம்.ஓர் ஆண்டுக்கு 20 தேர்வுகளில் சுமார் 50 லட்சம் தேர்வர்களை மதிப்பிட வேண்டி இருக்கும் என்று, பத்தி 4(III)(a)வில் குறிப்பிடுகிறது ஆணையத்தின் அறிவிக்கை. உண்மையிலேயே மிகப்பெரிய எண்ணிக்கைதான். ஆகவேதான், ஆன் லைன் தேர்வு முறை அவசியம் ஆகிறது. முதல் ஆண்டில், 2 முதல் 3 லட்சம் பேர் எழுதுகிற தேர்வுகளுக்கு, ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்படும்.படிப்படியாக எல்லா தேர்வுகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதுவும் அறிவிக்கை யிலேயே சொல்லப்பட்டு இருக்கிறது.

தேர்வுக்கு முன்பு, தேர்வின்போது, தேர்வுக்குப் பின்பு - என மூன்று நிலைகளும்,ஒப்பந்தத்தில் அடங்கும். தேர்வர்களுக்கு அனுப்புகிற குழுத் தகவல் (bulk email), வருகைப் பதிவேடு, அடையாளங்களை சரி பார்த்தல் ஆகிய பணிகள்; தேர்வு மையத்தில் தேர்வர்களுக்குப் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு, கணினிச் சேவை பாதுகாப்பு தொடர்பான கடமைகள்; மதிப்பீடு செய்தல், மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை தயாரித்தல் ஆகிய தேர்வுக்குப் பிந்தைய செயல்பாடுகள் ஆகியன, ஒப்பந்ததாரரின் பணிகள்ஆகும்.தடை இல்லாத இணையத் தொடர்பு வசதி, மின்சப்ளை பாதிக்கப்பட்டால் உடனடி ‘ஜெனரேடர்’ இணைப்பு,5 மணி நேரத்துக்குக் குறையாத ‘பேக் அப்’ பாதுகாப்பு, குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒப்பந்ததார நிறுவனம் கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வகைத் தேர்வுகள் நடத்துவதற்கான, ‘நிலையான செயல்முறை மரபு’ (standard operating procedure) கண்டிப்பாகப் பின் பற்றப்பட வேண்டும். வினாத்தாள், விடை களை ‘பாதுகாப்பாக’ மாற்றம் செய்கிற நடைமுறை உள்ளிட்ட அனைத்து செயல் பாடுகளும் ‘மூன்றாவது நபர்’ மூலம், பாதுகாப்புத் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.தொழில்நுட்பக் குறைபாடு ஏதும் எழாத வகையிலும், ‘ரகசியம்’ காப்பாற்றப் படுவதற்கான வழிமுறைகளிலும் மிகுந்த சிரத்தை எடுக்கப்பட்டு இருப்பதாகவே தோன்றுகிறது. பொதுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் நடத்துவதில், தமிழகம் எப்போதுமே சிறந்து விளங்குகிறது.சமீபத்தில் கூட, பல லட்சம் பேர் எழுதிய ‘குரூப் 4’ தேர்வின் போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அபாரமான நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியது.

பிறகு ஏன் ஒப்பந்த முறையில் தனியாரை நாட வேண்டும்...?
‘ஆன்லைன்’ தேர்வு முறையின் சாதகங்கள், இளைஞர்களுக்குப் பயன்படும் என்றோ, ஒரு மேற்பார்வையாளராக மட்டும் இருந்தால், இன்னமும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றோ ஆணையம் கருதி இருக்கலாம். தவறில்லை. ஒப்பந்த அடிப்படையில் ‘ஆன்லைன்’ தேர்வுக்கு மாறுகிற முயற்சிக்கு, கடும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. ஆட்சேபங்களுக்குத் தகுந்த விளக்கங்களை அளித்து, தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு, தேர்வாணையத்துக்கு மிக நிச்சயமாக இருக்கிறது. செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.ஒரு வினா மட்டும் விஞ்சி நிற்கிறது.

இங்கே முறைகேட்டுக்கு சாத்தியமே இல்லையா...?
முறைகேடு செய்வது என்று முடிவு எடுத்துவிட்டால், எந்தத் தேர்வு முறையுமே முழுக்கவும் பாதுகாப்பானது இல்லை. அது மட்டுமன்றி, ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிற நேர்மையின்மையும் நிர்வாகச் சீர்கேடும், ஒரே நாளில் மாறிவிடுமா என்ன..?

நவீனத் தொழில் நுட்பத்துக்கு மாறுவதும், விரைந்த செயல்பாட்டுக்கு வழி கோலுவதும், இளைஞர்களின் எதிர்காலத்துடன் நேரடி யாகத் தொடர்புடைய துறைக்கு மிகவும் அவசியம். பல லட்சக்கணக்கான இளை ஞர்கள், போட்டித் தேர்வுகள் எழுதி முடித்து, அதன் முடிவுகளுக்காக மாதக் கணக்கில் காத்துக் கிடக்கிற அவலம், இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது. ஆரோக்கியமான மாற்றத்தை வரவேற்பதே அறிவுடைமை. ‘ஆன்லைன்’ தேர்வு முறை மூலம், தேர்வாணையத்தின் மீது இளைஞர்களின் நம்பிக்கை மேலும் வலுவடையவே செய்யும். பார்ப்போம். நமது நம்பிக்கை பொய்க்காது என்று நம்புவோம்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews