தமிழக மருத்துவ மாணவர்களின் NEET கருணை மதிப்பெண்ணுக்கு தடை ஏன்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 21, 2018

Comments:0

தமிழக மருத்துவ மாணவர்களின் NEET கருணை மதிப்பெண்ணுக்கு தடை ஏன்?


தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாள் மொழி மாற்ற குழப்பத்தால் கருணை மதிப்பெண் 196 வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவிற்கு, உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்து உத்தரவிட்டது

நீட் தேர்வு வினாத்தாளில் 49 கேள்விகள் தமிழில் சரிவர மொழி பெயர்க்கப்படவில்லை. இதையடுத்து நீட் தேர்வு மொழிபெயர்ப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி டி.கே.ரங்கராஜன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் அதில், “நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் அதிக குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் என்ற வீதத்தில் மொத்தம் 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும்’’ என கோரியிருந்தார்

மனுவை விசாரித்த நீதிமன்றம், “சிபிஎஸ்இ நிர்வாகம் சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறதா?’’ எனக்கேள்வி எழுப்பியதோடு, பிழையாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண் என்ற வீதம் மொத்தம் 196 மதிப்பெண் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்குமாறும், அதேபோல் அடுத்த 2 வாரத்தில் புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக எம்பி டி.கே.ரங்கராஜன் தரப்பில் கேவியட் மனுவும், சிபிஎஸ்இ தரப்பில் மேல்முறையீட்டு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் நாகேஸ்வரராவ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது 

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதத்தில், “சாதாரண கேள்விகளை கூட சரியாக தயாரிக்க தெரியாத சிபிஎஸ்இ நிர்வாகத்தால் இவ்வகையான தேர்வை எப்படி செயல்படுத்த முடியும். மேலும் மொழிபெயர்க்கப்பட்ட கேள்விகளில் மூன்றில் ஒரு பங்கு பிழையாகத்தான் உள்ளது. இதனை தேர்வு எழுத கொடுக்கப்பட்டுள்ள குறுகிய கால நேரத்தில் மாணவர்கள் எப்படி திருத்தி சரி செய்துகொள்ள முடியும்.

இதுபோன்ற பிழையான மொழிமாற்றம் செய்யப்பட்ட கேள்விகளால் தேர்வெழுதியதில் அதிகப்படியான மாணவர்கள் தற்போது பாதிப்படைந்துள்ளனர். இதில் குறிப்பாக சீட்டா என்றால் சிறுத்தை என்று பொருள். ஆனால் அதனை மொழிமாற்றம் செய்தபோது பெயரை குறிக்கக்கூடிய சீத்தா என்று செய்துள்ளார்கள். இதில் சிபிஎஸ்இ நிர்வாகமே நடந்த பிழையை ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும் பிழையாக கேள்விகள் கேட்கப்பட்டால் அதற்கு கருணை மதிப்பெண் வழங்குவது தான் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது’’ என வாதிட்ட அவர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட நீட் வினாத்தாளை நீதிபதிகள் முன்னிலையில் தாக்கல் செய்தார் *சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனிந்தர் சிங் வாதத்தில், “நீட் தேர்வின் மொத்த மதிப்பெண் 720. ஆனால், தமிழில் தேர்வெழுதிய மாணவருக்கு கருணை மதிப்பெண்ணாக 196 வழங்கும் பட்சத்தில் நீட் தேர்வில் 554 மதிப்பெண் எடுத்துள்ள ஒரு தமிழக மாணவனின் மதிப்பெண் 750ஆக மாறிவிடும். இது மொத்தத்தை விட 30 மதிப்பெண் அதிகமாகும். இவ்வாறான சூழல் இருக்கும்போது உயர் நீதிமன்ற உத்தரவை எப்படி நடைமுறைப்படுத்த முடியும். தற்போது முதற்கட்ட கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் இதனால் குழப்பம் அடைவார்கள்’’ என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “நீட் தேர்வில் இதுபோன்ற புகார்கள் வரும் காலங்களில் எழாமல் இருக்க சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு சரியான வழிகாட்டுதலை நீதிமன்றத்தால் வழங்க முடியும். தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்குவதால் மற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்று பிரச்னைகளை தடுக்கும் விதமாக மாணவர்கள், பெற்றோர்கள், சிபிஎஸ்இ மற்றும் மாநில அரசுகள் ஆகியோர் ஒன்றிணைந்து ஏன் ஒரு குழுவை உருவாக்கி அதில் இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளக்கூடாது’’ என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு, மனுதாரர் ஆகியோர் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுவதாக தெரிவித்து வழக்கை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews