எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை கோவையில் வெள்ளிக்கிழமை அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் தாமரை வெளியிட அதை பெறுகிறார் கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன்.
தமிழகத்தில் உள்ள பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான மாநில அளவிலான கலந்தாய்வு கோவை, தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் புதன்கிழமை (ஜூலை 25) தொடங்குகிறது. இதற்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜூலை 20) வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சுமார் 120 பொறியியல் கல்லூரிகளிலும், 100 கலை, அறிவியல் கல்லூரிகளிலும் எம்.சி.ஏ. படிப்பு இருக்கிறது. அதேபோல், சுமார் 200 பொறியியல் கல்லூரிகளிலும், 80 கலை, அறிவியல் கல்லூரிகளிலும் எம்.பி.ஏ. படிப்பு நடத்தப்படுகிறது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கைக்காகத் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) மே மாதம் நடத்தப்பட்டது. முடிவுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், எம்.சி.ஏ. படிப்புக்கு 1,629 பேர் விண்ணப்பித்த நிலையில் 1,555 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. எம்.பி.ஏ. படிப்புக்கு 6,412 பேர் விண்ணப்பித்த நிலையில், 6,271 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
இதன்படி இரு படிப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 7,826 பேருக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இவர்களில் 3,950 மாணவர்களும், 3,848 மாணவிகளும், 19 மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர். இதற்கிடையே தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மாணவர் சேர்க்கையை நடத்தும் செயலரும், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வருமான பெ.தாமரை பட்டியலை வெளியிட, மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் பி.புருஷோத்தமன் பெற்றுக் கொண்டார்.
எம்.சி.ஏ. தரவரிசைப் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த மாணவர்களே முதல் 3 இடங்களையும் பிடித்துள்ளனர். எஸ்.நித்யா 70.33 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். ஆர்.ஹரீஷ் 67.66 மதிப்பெண்களையும், ராகுல் பாபு 61.66 மதிப்பெண்களையும் பெற்று 2, 3-ஆவது இடங்களைப் பிடித்துள்ளனர். எம்.பி.ஏ. தரவரிசைப் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த ஆர்.கார்த்திகா 80.66 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஆர்.ரேஷ்மி 80 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாமிடத்தையும், ஈரோடு ஏ.எஸ்.கார்த்திகா 78.33 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.
எம்.சி.ஏ. படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வும், 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
எம்.பி.ஏ. படிப்புக்கான கலந்தாய்வு 29ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதையடுத்து 30- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு தொடர்பான விவரங்களை WWW.GCT.AC.IN, WWW.TN-MBAMCA.COM என்ற இணைய தளங்களில் காணலாம். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை குறிப்பிட்டுள்ள இணைய பக்கங்களில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வில் பங்கேற்கும் பொதுப் பிரிவினர் ரூ.5,300க்கும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.1,150க்கும் வரைவோலை அல்லது ரொக்கம் கொண்டு வர வேண்டும். மேலும், அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும் என்றும் முதல்வர் தாமரை தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து எம்.சி.ஏ. படிப்புக்கு ஜூலை 28ஆம் தேதியும், எம்.பி.ஏ.வுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதியும் துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. பொது கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து பங்கேற்க இயலாதவர்கள், இதுவரை இணையதளம் மூலம் கலந்தாய்வுக்குப் பதிவு செய்யாதவர்கள், பதிவு செய்தும் விண்ணப்பிக்காதவர்கள் உள்ளிட்டோர் உரிய அசல் சான்றிதழ்களுடன் குறிப்பிடப்பட்ட நாள்களில் காலை 10 மணிக்கு நேரடியாக வந்து கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.