பொறியியல் கலந்தாய்வை தாமதமாக தொடங்க நீதிமன்றத்தில் அனுமதி கோருவோம்: உயர்கல்வித் துறை அமைச்சர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 13, 2018

Comments:0

பொறியியல் கலந்தாய்வை தாமதமாக தொடங்க நீதிமன்றத்தில் அனுமதி கோருவோம்: உயர்கல்வித் துறை அமைச்சர்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், பொறியியல் பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை காலதாமதமாக தொடங்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரவுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். திருநெல்வேலியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாள்களிடம் மேலும் கூறியதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு கட்டமைப்பு நிதியாக ரூ.20 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 1.7 கோடி அளவிலான பல்வேறு பணிகள் நிறைவு பெற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தேசிய தர நிர்ணயக் கமிட்டி (நாக்) வருகை தரவுள்ளது. இப்பல்கலைக்கழகத்துக்கு ஏ++ தர அந்தஸ்தை பெறுவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. பொறியியல் கலந்தாய்வு: நிகழாண்டு புதிதாக பொறியியல் கல்லூரிகள் உருவாக்கப்படவில்லை. பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக 509 கல்லூரிகள் பதிவு செய்துள்ளன. அந்தக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 1 லட்சத்து 78 ஆயிரத்து 139 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்காக ஆன்லைன் மூலமாக 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் பதிவு செய்துள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். ஏற்கெனவே இருந்த 26 பொறியியல் கல்லூரிகள் வேறு கல்லூரிகளாக மாற்றப்படவுள்ளன. அதனால், அந்தக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தள்ளிப்போகும் காரணத்தால், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தாமதமாக தொடங்குவதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யவுள்ளோம். நீதிமன்றத்தின் அனுமதிப்படி கலந்தாய்வு நடத்தப்படும். நிகழாண்டு புதிதாக கலை, அறிவியல் கல்லூரி தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை. இந்த ஆண்டு 41 உறுப்புக் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதேபோல் 264 புதிய பாடப் பிரிவுகளை வழங்கியிருக்கிறோம்.

உயர்கல்வித் துறையில் இந்திய அளவில் மாணவர் சேர்க்கை விகிதம் 25.2 சதவீதமாக இருந்தாலும்கூட, தமிழகத்தில் மாணவர் சேர்க்கை 46.9 சதவீதமாக உள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் தமிழக மாணவர்கள் முதலிடத்தில் உள்ளனர். வரும் 2020இல் 30 சதவீத மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் அதை நாம் இப்போதே தாண்டிவிட்டோம். முறைகேடு இல்லை: பல்கலைக்கழகத்தில் ஊழல் நடைபெறுவதாகக் கூறப்படுவது தவறான தகவல். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகம் வளர்ந்திருக்கிறது. அதற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. தவறு செய்பவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews