தெற்காசிய போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற அரசு பள்ளி மாணவர்கள்! கன்னியாகுமரியில் நடைபெற்ற தெற்காசிய சிலம்பம் போட்டியில் நெடுவாக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் 2 தங்கம் உள்பட 6 பதங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். தெற்காசிய சிலம்பம் சம்மேளனம் சார்பில் தெற்காசிய சிலம்பம் போட்டி கடந்த 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் கன்னியாகுமரியில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் இந்தியா, இலங்கை, நேபாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் 400 பேர் பங்கேற்றனர். போட்டிகள் மினி ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என நான்கு பிரிவுகளில் நடைபெற்றது.
இதில் நெடுங்கம்பு பிரிவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள நெடுவாக்கோட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 7 பேர் சப் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றனர். இந்த அணிக்கு திருவாரூர் மாவட்ட அமைச்சூர் சிலம்ப கழக செயலாளர் விக்னேஷ் பயிற்சியாளராக இருந்தார்.
போட்டிகளின் முடிவில் மாணவர் ஆகாஷ், மாணவி காவியாஸ்ரீ ஆகியோர் அதிக புள்ளிகள் பெற்று தங்க பதக்கங்களை வென்றனர். மாணவர் சூர்யா, மாணவி லத்திகா ஆகியோர் வெள்ளி பதக்கங்களையும், மாணவி தெய்வபிரியா, மாணவர் பேரரசு ஆகியோர் வெண்கல பதக்கங்களை வென்றனர்.
இதையடுத்து மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சியாளருக்கு நெடுவாக்கோட்டை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர் ஜோதிமணி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராசி குலோத்துங்கன், பெற்றோர் ஆசிரிய கழகம் சார்பில் கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் பதக்கங்களை வென்ற மாணவ, மாணவியர்களை அனைவரும் பாராட்டினர். இதுபோன்ற இளம் அரசு பள்ளி வீரர்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று நெடுவாக்கோட்டை கிராம மக்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.