மாணவர்களுக்கு இலவச 'லேப்டாப்' திட்டம்: ஸ்டாலினுக்கு பா.ஜ., எழுப்பும் கேள்விகள் Free laptop scheme for students: BJP questions Stalin
'ஆட்சிக்கு வந்து 55 மாதங்கள் தாமதமாக, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது ஏன்?' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சி முடிய இன்னும் 70 நாட்களே உள்ள நிலையில், கல்லுாரி மாணவர்களுக்கு, இப்போது 'லேப்டாப்' வழங்குவது, முதல்வர் ஸ்டாலினின், அப்பட்டமான கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றி, திசைதிருப்ப முயலும் முதல்வருக்கு சில நேரடி கேள்விகள்.
ஆட்சிக்கு வந்து, 55 மாதங்கள் தாமதமாக, 'லேப்டாப்'கள் வழங்குவது ஏன்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புரட்சிகர திட்டத்தை நிறுத்த முயற்சித்து, அதன் பிறகு, மாணவர்களின் கோபத்திற்கு ஆளானதாலேயே லேப்டாப் வழங்க முடிவு செய்துள்ளீர்கள் என்பதை, உங்களால் மறுக்க முடியுமா? கடந்த தேர்தலின்போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'டேப்லெட் மற்றும், 10 ஜி.பி., டேட்டா கொடுப்போம்' என வாக்குறுதி அளித்தீர்கள். 'லேப்டாப்' திட்டத்தை நிறுத்தவே, 'டேப்லெட்' வழங்குவதாக அறிவித்தீர்கள். ஆனால், 55 மாதங்களாக 'லேப்டாப்' வழங்காமல், டேப்லெட்டும் வழங்காமல் கிடப்பில் போட்டது ஏன்?
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு, கல்லுாரிக்குள் நுழையும் முன்பே, லேப்டாப்கள் வழங்கப்பட்டன. ஆனால், இப்போது தி.மு.க., ஆட்சியில் பள்ளி மாணவர்கள், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது ஏன்?
கடந்த பட்ஜெட்டில், 20 லட்சம் லேப்டாப்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததாக அறிவிப்பு வெளியானது. ஆனால், 10 லட்சம் லேப்டாப்கள் மட்டுமே கொடுப்பதாக செய்தி வெளியாகிறது. மீதமுள்ள ௧௦ லட்சம் லேப்டாப்கள் என்னவாயின?
உங்களுக்கு ஊழல் செய்வது புதிதல்ல; ஆனால், மாணவர்களின் கல்வியிலும் ஊழல் செய்ய வேண்டுமா? வெற்று விளம்பரத்திற்காக, இத்திட்டத்தை அரைகுறையாக செயல்படுத்த நினைக்கும் தி.மு.க., அரசை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.