முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு கடினம் தேர்வர்கள் வருத்தம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 13, 2025

Comments:0

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு கடினம் தேர்வர்கள் வருத்தம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு கடினம் தேர்வர்கள் வருத்தம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு, சற்று கடினமாக இருந்தது' என்று தேர்வர்கள் தெரிவித்தனர். விண்ணப்பித்தவர்களில், 93 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.

தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை - 1, கணினி பயிற்றுநர் நிலை - 1 போன்றவற்றில் காலியாக உள்ள, 1,996 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில் போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியானது. வழக்கு அக்டோபர், 12ல் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கு, ஒரு லட்சத்து 73,410 ஆண்கள்; 63,113 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஏழு பேர் என, மொத்தம், 2 லட்சத்து, 36,530 பேர் விண்ணப்பித்தனர்.

இந்த முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு, புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதால், தேர்வுக்கு தயாராக கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், தேர்வை தள்ளி வைக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

அதனால், நேற்று திட்டமிட்டபடி, தமிழகம் முழுதும், 809 மையங்களில் போட்டித்தேர்வு நடந்தது.

சென்னையில் மட்டும், 55 மையங்களில் நடந்தது. தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

காலை, 10:00 முதல் பகல், 1:30 மணி வரை தேர்வு நடந்தது. விண்ணப்பித்தவர்களில், 93.10 சதவீதம் பேர், அதாவது, 2 லட்சத்து 20,412 பேர் தேர்வு எழுதினர்; 16,118 பேர் பங்கேற்கவில்லை. 180 வினாக்கள் போட்டித்தேர்வில், தமிழ் மொழி தகுதி வினாக்கள் 50; உளவியல் 30; பொது அறிவியல் 10; பாடம் சார்ந்த வினாக்கள் 110 என, மொத்தம், 180 வினாக்கள் இடம் பெற்றிருந்தன.

இதில், தமிழ் தகுதித் தேர்வில், 20 மதிப்பெண் பெற வேண்டும். இல்லையெனில், விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது. தேர்வு சற்று கடினமாக இருந்தது, குறிப்பாக, தமிழ் இலக்கியங்கள் சார்ந்த வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.

வேதியியல் பாடம் சார்ந்த வினாக்களும் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews