மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 20, 2025

Comments:0

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!



மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட 50 சேவைகளை, இனி தமிழக மக்கள் வாட்ஸ்-ஆப் மூலமே பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.

தமிழக அரசு, தன்னுடைய சேவைகளை மிக விரைவாக மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

ஒரே ஒரு எண் மூலம் அணுகக்கூடிய இந்த சாட்பாட் உருவாக்கப்பட்டு, முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள தமிழக மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தும் தமிழக அரசு வழங்கும் 50 அத்தியாவசிய சேவைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் முதற்கட்டமாக இந்த சேவை வழங்கப்படும். அதிகபட்ச வார்த்தைகளை எழுதி மக்கள் தேவைகளை கேட்டறியலாம். அது மட்டுமல்லாமல் மின் மற்றும் குடிநீர் போன்ற கட்டணங்களை செலுத்துவது,வரி செலுத்துவது, மெட்ரோ டிக்கெட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே சாட்பாட்டின் மூலம் பெற முடியும்.

ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு அலுவலகத்துக்கு மக்கள் அலைவதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

மக்களை மையமாகக் கொண்ட, வெளிப்படையான மற்றும் உறுதியான நிர்வாகத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை வழிநடத்தும் தொலைநோக்குப் பார்வையை தமிழக அரசு கொண்டிருக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். தற்போது மெட்டா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருப்பது, அந்தப் பயணத்தில் ஒரு முக்கியப் படியாகும். மாநிலத்தின் முக்கிய சேவைகளை, வாட்ஸ்அப்பின் எளிமை மற்றும் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளத்துடன் இணைப்பதன் மூலம் தமிழக அரசு மக்களுக்கான சேவைகளை எளிமையாகக் கிடைப்பதுடன், அதில் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒருங்கே ஏற்படும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கான மெட்டாவின் வணிகப் பிரிவு இயக்குநர் ரவி கார்க் கூறுகையில், வாட்ஸ்ஆப் என்பது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சமூக வலைத்தளமாகும், மேலும் அதன் எளிமை மற்றும் பயன்பாட்டு வசதி அரசு சேவைகளுக்கு டிஜிட்டல் பயன்பாட்டை வழங்குவதற்கான சிறந்த தளமாக அமையும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews