தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி கொடுக்காதது ஏன்? - நீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்ன விளக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 23, 2025

Comments:0

தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி கொடுக்காதது ஏன்? - நீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்ன விளக்கம்!



தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி கொடுக்காதது ஏன்? - நீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்ன விளக்கம்!

தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி கொடுக்காததற்கான காரணம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய விளக்கம் அளித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை. மாணவர் சேர்க்கையை விரைவில் தொடங்க உத்தரவிட வேண்டும்," எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஆர். சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (மே 22) விசாரணைக்கு வந்தது.

அப்போது, "கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும்,"என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு (மே 23) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன், தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கைக்கான மத்திய அரசின் பங்கு தொகை ஒதுக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பல மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை,"எனக் குறிப்பிட்டார்.

அபோது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசின் பெரியண்ணன் (Big brother) மனப்பான்மையை காட்டுகிறது,"என கூறினார்.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதிகள், "25 சதவிகித இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை தொடங்குவது குறித்து வரும் 28ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,"என்றும் உத்தரவிட்டனர்.


SSA - கல்வி நிதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

மத்திய அரசு கல்வி நிதி வழங்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசு, கல்வி நிதியை வழங்க உத்தவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

பிஎம் ஸ்ரீ மற்றும் சமக்ர சிக்‌ஷா திட்டங்களின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது சட்டவிரோதம். ரூ.2,291 கோடி கல்விநிதியை விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும் என கேரிக்கை வைத்துள்ளது.

மேலும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாததால் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews