மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு: மாணவர்கள் தாமதமின்றி விண்ணப்பிக்க அறிவுறுத்தல் NEET Exam: Students advised to apply without delay - Last date is March 7.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மார்ச் 7-ம் தேதிக்குள் முடிவடைய உள்ள நிலையில், மாணவர்கள் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதேபோல, ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கியது. இதற்கான காலஅவகாசம் மார்ச் 7-ம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் neet.nta.nic.in என்ற வலைத்தளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளை இறுதிநாள் வரை தாமதம் செய்யாமல், முன்கூட்டியே முடித்தால் கடைசிநேர சிரமங்களை தவிர்க்கலாம். ஒரு மாணவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நீட் தகுதித் தேர்வு மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் மே 1-ம் தேதி வெளியிடப்படும்.
அதன் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.