How many teachers and government employees will be elected in 2025? - Anbumani Question - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 06, 2025

Comments:0

How many teachers and government employees will be elected in 2025? - Anbumani Question



2025ல் தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? - அன்புமணி கேள்வி

2025-ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? என்றும் அதன் விவரங்களை வெளியிடாமல் மூடி மறைப்பது ஏன்? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டு பிறந்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எவ்வளவு பேர் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எவ்வளவு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறித்த விவரங்களை இரு அமைப்புகளும் இன்னும் வெளியிடவில்லை.

அரசு பணிகள் குறித்த அறிவிப்புகளுக்காக ஒரு கோடிக்கும் கூடுதலான இளைஞர்கள் காத்துக்கிடக்கும் நிலையில் அரசு பணிகள் குறித்த விவரங்களை திட்டமிட்டே வெளியிடாமல் அரசு தவிர்ப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை ஓர் ஆண்டில் எத்தனைப் போட்டித் தேர்வுக்கான அறிவிக்கைகளை வெளியிடவுள்ளன, அவை எந்தெந்த தேதிகளில் வெளியிடப்படும், அவற்றின் மூலம் நிரப்பப்படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த உத்தேசத் திட்டம் அதற்கு முந்தைய ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படுவது வழக்கம்.

அத்தகைய ஆண்டுத் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடப்பாண்டில் 7 போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்படும் என்று கடந்த அக்டோபர் 10-ஆம் தேதியே அந்த அமைப்பு அறிவித்தாலும் கூட ஒவ்வொரு போட்டித் தேர்வின் மூலம் எவ்வளவு பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்? என்பது குறித்த விவரங்களை இன்னும் வெளியிடவில்லை

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடப்பாண்டில் 7 வகையான பணிகளுக்கு மட்டுமே போட்டித் தேர்வுகள் நடத்தப்படுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு ஆண்டும் 15-க்கும் கூடுதலான போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு நடத்தப்படுவது வழக்கம் ஆகும்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2023-ஆம் ஆண்டில் இது 12 ஆக குறைந்தது, 2024-ஆம் ஆண்டில் இது 8 ஆக சரிந்தது. நடப்பாண்டில் வெறும் 7 போட்டித்தேர்வுகள் மட்டுமே நடத்தப்படவுள்ளன. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு கோரி 1.30 கோடி படித்த இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பது நியாயமல்ல. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. 2024ம் ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 10,375 ஆசிரியர்களும், உதவிப் பேராசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரே ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை.

2023ம் ஆண்டு அக்டோபர் 25ம் நாள் அரசு பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், இன்னும் அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படவில்லை. அந்த லட்சனத்த்தில் தான் அரசும், தேர்வு வாரியமும் செயல்பட்டு வருகின்றன.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஐந்தாண்டுகளில் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசு பணிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் ஓய்வு பெற்றிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்தால் மொத்தம் 7 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும். அதற்காக ஆண்டுக்கு 1.40 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக சேர்த்தே 40 ஆயிரம் பேருக்கு தான் அரசு வேலைகளை திராவிட மாடல் அரசு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு மன்னிக்கவே முடியாத அளவுக்கு பெரும் துரோகத்தை தமிழக அரசு செய்திருக்கிறது.

படித்த இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதை இனியாவது திராவிட மாடல் அரசு கைவிட வேண்டும். உண்மையில் தமிழ்நாட்டில் 6 லட்சத்திற்கும் கூடுதலான அரசு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றாலும் கூட, நடப்பாண்டில் குறைந்தது 2 லட்சம் பேருக்காவது அரசு வேலைகளை வழங்க வேண்டும்.

அதற்கேற்ற வகையில் நடப்பாண்டிற்கான ஆள்தேர்வு அறிவிக்கைத் திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை உடனடியாக வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews