TET தேர்ச்சி பெற்று 12 ஆண்டுகளாக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 30, 2025

Comments:0

TET தேர்ச்சி பெற்று 12 ஆண்டுகளாக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள்

Tamil_News_lrg_3842723


TET தேர்ச்சி பெற்று 12 ஆண்டுகளாக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றும் 12 ஆண்டுகளாக பணி நியமனங்களுக்காக 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். தற்போது நியமனத் தேர்வு எழுதிய நிலையில் அதன் முடிவுகளை வெளியிடுவதிலும் கல்வித்துறை இழுத்தடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அரசு, உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு டி,இ.டி., கட்டாயமாக்கப்பட்டது. இதுவரை 6 முறை இத்தேர்வு நடந்துள்ளது. இதன் மூலம் தற்போதைய நிலவரப்படி 68,756 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தொடக்க பள்ளிகளில் காலியாக உள்ள 2768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 2024 ஜூலையில் நியமனத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 25,391 பேர் எழுதினர். ஆனால் இதுவரை முடிவு வெளியாகவில்லை.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 10 ஆயிரத்திற்கும் மேல் காலியாக உள்ள நிலையில் 2768 பணியிடங்களை மட்டும் நிரப்பும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நியமனத் தேர்வு எழுதியோரின் முடிவை விரைவில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வர்கள் அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: தொடக்க கல்வித் துறையில் 31,214 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகள் உள்ளன. 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். கொரோனா பரவலுக்கு பின் அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளன. இதில் 1 - 5ம் வகுப்பு வரை மட்டும் 2.8 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கை பெற்றுள்ளனர். ஆனால் 2013ல் இருந்து தற்போது வரை ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை. தற்போதைய நிலையில் 25 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அரசு சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை வெளிப்படையாக அறிவிக்க மறுத்து வருகிறது.

அதேநேரம், 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டி.இ.டி., தேர்ச்சி பெற்று பணிக்கு காத்திருக்கும் நிலையில், இதுவரை 5900 இடைநிலை, 7 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டது ஏன். எனவே 2768 என்ற காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரித்து வெளியிட வேண்டும்.

மொத்த காலிப்பணியிடங்கள் விவரம் குறித்து வெள்ளை அறிக்கையும், 2024ல் நடந்த நியமன தேர்வு முடிவுகளையும் உடன் அறிவிக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84545915