அரசு பள்ளிகளில் இணைய வசதிக்கான சேவை கட்டணம்: பள்ளி கல்வி துறை ரூ.3.26 கோடி நிதி விடுவிப்பு
அரசுப் பள்ளிகளில் இணையதள வசதிக்கான சேவைக் கட்டணத்தை செலுத்தும் வகையில் ரூ.3.26 கோடி நிதியை பள்ளிக்கல்வித் துறை விடுவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள பிராட்பேண்ட் சேவைக் கட்டணத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.50 கோடி நிலுவை வரை நிலுவை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையாகின. இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் 2,973 உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூ.1,500 வீதம் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு ரூ.44 லட்சத்து 59,500-ம், 3,074 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு ரூ.92,022-ம் என மொத்தம் ரூ.1 கோடியே 36 லட்சத்து 81,500 நிதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து இணையதள வசதியுள்ள 6,224 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான சேவைக் கட்டணத்தை செலுத்தும் வகையில் ரூ.3.26 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை உடனே இணையதள சேவை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும்.
அதற்கான விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக எமிஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே மத்திய அரசின் நிதியுதவியின் கீழ் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், மத்திய அரசு மானியத்தை நிறுத்தி வைத்துள்ளதால் மாநில அரசு தன் சொந்த நிதியில் இருந்து செலவிட்டு வருவதாகவும் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.