175 அரசு மேல்நிலை பள்ளிகளில் நவீன கணினி அறிவியல் ஆய்வகங்கள் Modern computer science laboratories in 175 government higher secondary schools:
தமிழகத்தில் 175 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் வரும் 2024-25-ம் கல்வியாண்டில் ரூ.57.80 கோடி மதிப்பில் நவீன கணினி அறிவியல் ஆய்வங்கள் அமைக்கப்படவுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் நடப்பாண்டில், பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது, ஒரு அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்கள் கணினித் தொழில்நுட்பம் மற்றும் குறியீடுகளை நடைமுறைப் பயிற்சியின் மூலம் கற்றுத் தேர்வதற்கு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகேற்ப படிப்படியாகத் தரம் உயர்த்தப்படும்.
முதல்கட்டமாக, 2024-25-ம் கல்வியாண்டில் 1,000 மாணவர்களுக்கு மேல் பயின்றுவரும் அரசுப்பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் என்று அதில் அமைச்சர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, 2024-25-ம் கல்வியாண்டில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவுகள் உள்ள 2,903 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதல்கட்டமாக 5 மாணவர்களுக்கு ஒரு கணினி என்ற கணக்கில் 175 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12,043 கணினிகள் மற்றும் உபகரணங்களுடன் கூடிய புதிய நவீன கணினி அறிவியல் ஆய்வகங்களை மேம்படுத்த பள்ளி கல்வித்துறை இயக்குநர் கோரினார்.
இதனை பரிசீலித்த தமிழக அரசு, மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அரசுப்பள்ளி மாணவர்கள் தங்கள் தனித்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு 175 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12,043 கணினிகள் மற்றும் உபகரணங்களுடன் கூடிய புதிய நவீன கணினி அறிவியல் ஆய்வகங்களை ரூ.57.80 கோடியில் அமைக்க அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.