பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஓராண்டு தொழில்பயிற்சி திட்டம் விரைவில் அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 21, 2024

Comments:0

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஓராண்டு தொழில்பயிற்சி திட்டம் விரைவில் அறிமுகம்



பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஓராண்டு தொழில்பயிற்சி திட்டம் விரைவில் அறிமுகம்

பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் வகையில் ஓராண்டு கால தொழில்பயிற்சி திட்டத்தை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிமுகப்படுத்த உள்ளது.

10-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களில் கணிசமானோர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு கால பொறியியல் டிப்ளமா படிப்பில் சேருகிறார்கள். அதேபோல், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 'லேட்ரல் என்ட்ரி' முறையில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக், அரசு உதவி பெறும் பாலிடெக்னிக், தனியார் சுயநிதி பாலிடெக்னிக் என 450-க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளில் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 50 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து பயில்கின்றனர். ஓரு காலத்தில் பாலிடெக்னிக் டிப்ளமா படிப்பில் சேர இடம் கிடைப்பது கடினமாக இருந்து வந்த நிலையில், அண்மைக் காலமாக பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என பல்வேறு பாடப்பிரிவுகளில் சுமார் 300 இடங்கள் இருந்தாலும் அதில் 50 சதவீத இடங்களே நிரம்புகின்றன.

இந்நிலையில், பாலிடெக்னிக் டிப்ளமா படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கவும், இன்றைய தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமை உடையவர்களாக அவர்களை உருவாக்கும் நோக்கிலும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பாலிடெக்னிக் பயிலும் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த ஓராண்டு கால தொழில்பயிற்சி திட்டத்தை (Industrial Training Program) அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்படி, 3 ஆண்டு கால படிப்பில் மாணவர்கள் கடைசி ஓராண்டு ஏதேனும் ஒரு தொழில்பயிற்சி மையத்தில்நேரடி பயிற்சி பெறுவார்கள். அந்த மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அனுமதி பெற்றதாக இருக்கும். முதல் இரண்டு ஆண்டுகள் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து அங்கு தற்போதைய முறையில் தேர்வெழுதுவார்கள்.

3-ம் ஆண்டு முழுவதும் கல்லூரிக்கு வெளியே குறிப்பிட்ட தொழில்பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் தியரியுடன் செயல்முறை திறன், தகவல்தொடர்புத்திறன், நேரடி தொழில்பயிற்சி போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். அந்த மையத்தில் மாணவர்களுக்கு இரண்டு செமஸ்டர் தேர்வுகள் (அக்டோபர் மற்றும் ஏப்ரல்) நடத்தப்பட்டு குறிப்பிட்ட மதிப்பெண் (கிரெடிட்) வழங்கப்படும். மதிப்பெண் விவரங்கள் மாணவர்கள் படித்துவந்த பாலிடெக்னிக் கல்லூரியில் சமர்ப்பிக்கப்படும். 3 ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் டிப்ளமா வழங்கப்படும். இந்த புதிய திட்டத்தில் விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர். இத்திட்டத்தில் சேர விருப்பம் தெரிவித்த மாணவர்கள் அதன்பிறகு பழைய முறைக்கு மாறிக்கொள்ள முடியாது. இத்திட்டத்துக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்டுள்ளது.

பாலிடெக்னிக் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் கொண்டுவரப்படுகிற இந்த ஓராண்டு கால தொழில்பயிற்சி திட்டம் குறித்து நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) சேர்ந்துள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் துறைத்தலைவர்களுக்கு மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் அறிவுரை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews